பல கோடி ரூபாய் கடனால் விரக்தி மனைவி, மகள்களுடன் தொழிலதிபர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

கோவை: கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் அருகேயுள்ள மில் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52). பாட்டில் மூடி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு விசித்ரா (46) என்ற மனைவியும், நிதி (25), ஜெயநிதி (14) என்ற மகளும் இருந்தனர். இதில், மூத்த மகள் நிதி கனடாவில் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இளைய மகள் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். ராமச்சந்திரன் தான் வசிக்கும் வீட்டின் அருகே பல கோடி ரூபாய் செலவில் புதிதாக பங்களா கட்டி வந்தார். இவர் தொழில் அபிவிருத்தியாக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். சொத்துக்களை அடமானம் வைத்து பெரும் தொகை கடன் வாங்கியிருப்பதாக தெரிகிறது. இவர் மனைவியின் பெயரில் சில மாதம் முன் சுமார் ரூ.20 கோடி கடன் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் கடன் பிரச்னையால் தவித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் ராமச்சந்திரன் வீட்டிற்கு அவரின் அக்கா ராணி (55) சென்றுள்ளார். அப்போது வீட்டில் ராமச்சந்திரன், அவர் மனைவி, 2 மகள்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேரும் சயனைடு கரைத்து அதை நீரில் போட்டு கலக்கி குடித்து தற்ெகாலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டில் விசித்ரா தற்கொலை செய்யும் முன் டைரியில் இருந்த பேப்பரில் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், ‘‘என் கணவர் ராமச்சந்திரன் கோபத்தினால் எங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. அவர் அதிகமாக கடன் வாங்கியது எங்களுக்கு பிடிக்கவில்லை. இந்த கடனை வாழ்நாள் முழுவதும் கட்ட முடியாது என நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. நாங்கள் இதை பார்க்க விரும்பாமல் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறோம். என் கணவர் இனி அவர் விருப்பம்போல் வாழட்டும்’’ என எழுதியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், ‘‘முதலில் விசித்ரா, தனது இரு மகள்களுடன் முதலில் தற்கொலை செய்துள்ளார். மனைவி, மகள்கள் தற்கொலை செய்தபோது அவர் வீட்டில் ஹாலில் இருந்திருப்பதாக தெரிகிறது. அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது மனைவி, மகள்கள் இறந்துவிட்டது தெரிந்து அவரும் சயனைடு பொடி கலந்த நீரை குடித்து தற்கொலை செய்திருக்கலாம்’’ என்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி