இன்று முதல் 25ம் தேதி வரை ‘ஜீரோ’ விபத்துக்கள் காட்டும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: விபத்தில்லா மாநகரம் உருவாக்க வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு

சென்னை: சென்னையில் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை ‘ஜீரோ’ விபத்துக்கள் காட்டும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து விபத்தில்லா மாநகரம் உருவாக்கும் வகையில் அனைத்து சிக்னல்களிலும் ‘ஜீரோ இஸ் குட்’ என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை வைத்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அந்த வகையில் ஆகஸ்ட் 6 முதல் 25ம் தேதி வரை, அதாவது 20 நாட்கள் சென்னை பெருநகர காவல் எல்லையில் விபத்தில்லா சென்னையை உருவாக்கும் வகையில் ஒரு வாரத்திற்கு முன்பே ‘ஜீரோ இஸ் குட்’ என்ற வாசகத்துடன் சென்னை முழுவதும் அனைத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் பதாகைகள் வைத்துள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் அவரவர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், சிக்னல்களில் ‘நில் கவனி செல்’ என்று விழிப்புணர்வு செய்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் முறையாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டும், கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

சிக்னல்களில் மஞ்சள் நிற விளக்குகள் எரியும் போது வாகனத்தை எல்லை கோட்டுக்குள் நிறுத்த வேண்டும். 2 பேருக்கு மேல் இருசக்கர வாகனங்களில் பயனம் செய்ய கூடாது. லோடு வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதாக ஏற்ற கூடாது. பள்ளி வாகனங்கள் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து சிக்னல்களில் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் அந்தந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு விடப்பட்டுள்ளது.

அதேநேரம் சென்னை பெருநகர காவல் எல்லையில் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு காவல் நிலைய எல்லையில் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை விபத்தில்லா ‘ஜீரோ இஸ் குட்’ என்ற வாசகத்தின் படி எந்த வித விபத்துக்களும் பதிவுகள் நடைபெறாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் பணம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகர காவல் எல்லையில் அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களும் தங்களது எல்லையில் நேற்று முதல் விபத்தில்லா மாநகரம் உருவாக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

கிண்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போக்குவரத்து போலீசார் அவர்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை வைத்து, வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் சென்னையில் சாலை விபத்துக்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை