மதுரவாயலில் மின்சாரம் அடிக்கடி துண்டிப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

பூந்தமல்லி: மதுரவாயலில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மதுரவாயலில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த மக்கள், மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மதுரவாயல் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து, மதுரவாயல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த மின்வாரிய ஊழியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் ஊழியர்கள் தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். இரவு நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பகல் நேரத்தில் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி மாணவர்கள் தூக்கமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர். இதுகுறித்து மின்வாரிய ஊழியரிடம் கேட்டபோது, ‘‘மதுரவாயலில் உள்ள மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கி வரும் கோயம்பேடு மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள மின் நிலையத்திலிருந்து போதுமான அளவில் மின்சாரம் கிடைக்கவில்லை‌‌. மின்பற்றாக்குறையே அடிக்கடி மின் தடைக்கு காரணம் என்றனர்.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு