நைஜரில் பிரெஞ்சு தூதரகம் மீது தாக்குதல்

நியாமி: பிரான்ஸ் உள்ளிட்ட காலனி ஆதிக்க நாடுகளை கண்டித்து நைஜரில் நடந்த பேரணியின்போது பிரெஞ்சு தூதரகம் தாக்கப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தை சேர்ந்த நைஜர் கடந்த 1960ம் ஆண்டு பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றது. அதன்பின் அங்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஆட்சியும், ராணுவ ஆட்சியும் மாறி, மாறி நடைபெற்று வருகிறது. அங்கு அதிபர் முகமது பாசும் அதிபராக பதவி வகித்து வந்தார். அரசின் தவறான நடவடிக்கைகளால் நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல், பாதுகாப்பின்மை, ஊழல் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி ராணுவ தளபதி அப்தூரஹ்மேன் சியானி தலைமையில் ராணுவ கிளர்ச்சி நடந்தது. இதையடுத்து முகமது பாசும் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்த ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

விடியோ பதிவில் தோன்றிய ராணுவ தளபதி அப்தூரஹ்மேன் சியானி தன்னை நைஜர் அதிபராக அறிவித்துக் கொண்டார். நைஜரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து நைஜருக்கான பொருளாதார உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்துவதாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் பிரான்ஸ் உள்ளிட்ட காலனி ஆதிக்கத்துக்கு எதிராக நைஜர் தலைநகர் நியாமியில் பேரணி நடைபெற்றது. நைஜரின் ராணுவ ஆட்சி ஆதரவாளர்கள் நடத்திய இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் ரஷ்ய அதிபர் புடின் பெயரை முழக்கமிட்டனர். பிரான்ஸ் நாட்டுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். . தொடர்ந்து அங்குள்ள பிரெஞ்சு தூதரக கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகைமூட்டம் சூழ்ந்தது.

 

Related posts

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு