சரக்கு ரயிலில் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்

தண்டையார்பேட்டை: சரக்கு ரயில் மீது ஏறி நின்று போட்டோ எடுக்க போஸ் கொடுத்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு விவேகானந்தா அவென்யூவை சேர்ந்தவர் கவின் சித்தார்த் (19). இவர் தனியார் கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்தார். இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள நீச்சல் குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் அங்கு அனைவரும் குளித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

வழியில், வஉசி.நகர் ரயில்வே யார்டு பகுதியில் அவர்கள் குரூப் போட்டோ எடுக்கலாம் என்று கூறி சென்றுள்ளனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது கவின் சித்தார்த் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது கையை தூக்கியபோது அங்குள்ள மின்சார கம்பி மீது அவரது கை பட்டதால் ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டு உடல் கருகி கீழே வந்து விழுந்தார்.

இது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்ததும் நண்பர்கள் ஓடிச்சென்று ரயில்வே யார்டில் இருந்து ஊழியர்களை அழைத்துவந்துள்ளனர். பின்னர் மாணவர் கவின் சித்தார்த்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சோதனை செய்து பார்த்தபோது மாணவர் கவின் சித்தார்த் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்ததும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வந்து கவின் சித்தார்த் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுசம்பந்தமாக தண்டையார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அனுராஜ் கௌதா கொடுத்த புகாரின்படி, ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு

12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்