சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அதிமுக சார்பில் எடப்பாடி மாலை அணிவித்தார்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் 17.4.1756ம் ஆண்டு பிறந்தார். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதை தடுத்திட தொடர்ந்து போரிட்டு வந்த தீரன் சின்னமலையை, போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரை கைது செய்து போலி விசாரணை நடத்தி 31.7.1805 அன்று சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டனர்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் க.கணபதி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பொன்னையன், டி.ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, எம்.சின்னசாமி, பென்ஜமின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

* அடக்குமுறைக்கு எதிரான எரிமலை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவு: சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை. அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழ் மண்ணில் விடுதலை கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்