கை போனதைவிட லைசன்ஸ் போனதற்கு தான் கலங்கினேன்: சிறையில் இருந்து விடுதலையான யூடியூபர் டிடிஎஃப் வாசன் பேட்டி

சென்னை: ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து யூடியூபர் டிடிஎஃப் வாசன் விடுதலையானார். சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் செப்டம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் 2வது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனை விதித்து வாசனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து யூடியூபர் டிடிஎஃப் வாசன் விடுதலையானார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிஎஃப் வாசன்; சிறையில் அதிகாரிகள் நல்ல முறையில் நடத்தினர். பைக் தான் எனக்கு எல்லாமே. என்னுடைய பேஷன் தான், எனக்கு புரொபஷன். என்னை பாலோ செய்வதால் யாரும் தவறான வழிக்கு செல்வதில்லை. என் மீது கொடுக்கப்பட்ட புகார் தவறானது. கண்டிப்பாக பைக் ஓட்டுவேன், அதே நேரத்தில் படமும் நடப்பேன். கை போனதைவிட லைசன்ஸ் போனதற்கு தான் கலங்கினேன். ஓட்டுநர் உரிமத்தை திரும்ப பெற மேல்முறையீடு செய்வேன். எங்க போனாலும் ஹெல்மேட் போடுங்க. அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்