சென்னையில் 1000 இடங்களில் இலவச வைபை: அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் 1000 இடங்களில் இலவச வைபை திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருவதாக அதிகாரி தெரிவித்தார். இந்த இணைய யுகத்தில் தகவல் பரிமாற்றம் அடிப்படை தேவையாக உள்ளது. சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை நிறுவ, தகவல் மற்றும் வாய்ப்புகளை அனைவரும் அணுகுவது இன்றியமையாதது. இன்று எங்கோ நடக்கும் ஒரு விஷயம் உடனுக்குடன் நாம் அறிவதற்கு இணையவசதியே காரணம். அதன் அடிப்படையில் பொது இடங்களில் இலவச வைபை வசதி தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தப்படுகிறது.

சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெரினா கடற்கரையை ஏராளமான வசதிகளுடன் மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அப்போது நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்தவகையில், சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைபை (WiFi) வசதி செய்து தரப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன்படி சென்னையில் பல இடங்களில் வைபை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்: சென்னையில் 1000 இடங்களில் இலவச வைபை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இவை இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், பூங்கா, கல்லூரி, பள்ளி போன்ற இடங்களில் அமைக்கப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய கடற்கரையான மெரினா, பெசன்ட்நகர் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

பல இடங்களில் வயர்கள் பதிக்கும் பணி நிறைவடைய உள்ளது. இதற்காக எல்காட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வைபை தொடர்பை 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.பொதுமக்கள் தங்கள் கைபேசியில் இலவச வைபை பெறுவதற்கு கைபேசி எண்ணைப் பதிவு செய்து ஓடிபி மூலம் இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் 50 இடங்களில் இலவச வைபை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு