இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் முன்பணமாக ரூ.200 கோடி ஒதுக்கி அரசாணை: தமிழ்நாடு அரசு வெளியீடு

சென்னை: அடுத்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி முன்பணமாக ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக ஒரு கோடியே 68 லட்சம் எண்ணிக்கையிலான சேலைகள் மற்றும் ஒரு கோடியே 63 லட்சம் வேட்டிகளை உத்தேச உற்பத்தி திட்ட இலக்காக நிர்ணயம் செய்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதேபோல, பொதுமக்களுக்கு வேட்டி, சேலையை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் துறை தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த்துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்படுகிறது.

மேலும், வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேட்டி – சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, நியாய விலைக் கடைகளின் விற்பனை முனையத்தில் வேட்டி சேலைகளை வழங்கும்போது விரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. இதனை தவறாது செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 110% கூடுதலாக பதிவு!!

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!