திருக்கழுக்குன்றம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சியில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: இந்திய அளவில் முதன்முதலாக வழங்கப்பட்டுள்ளது

திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினம் ஊராட்சியில் இந்திய அணுசக்தி துறை சார்பில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. மும்பையில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய அணுசக்தி துறை சார்பில், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 50 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் இன்றி பயன்படுத்தும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகாமையில் உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. இந்த ஊராட்சியில் 5 ஆயிரம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்படும் என்று இந்திய அணுசக்தி துறை அறிவித்தது.

இதையடுத்து புதுப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அணுவாற்றல் குடியிருப்பு, ராஜா நகர், பல்லவன் நகர், ஊஸ்டர் நகர், மீனவர் குடியிருப்பு, பெருமாள்சேரி உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச நவீன சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தனபால், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்திய அணுசக்தி துறை இயக்குனர் செனாய், இந்திய அளவில் முதன் முதலாக புதுப்பட்டினம் ஊராட்சியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு, இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கி இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மேலும் புதுப்பட்டினத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களில் 2 வருடங்களில் உதிரி பாகங்கள், பழுது ஏற்பட்டால் அதனை அணுவாற்றல் துறை நிர்வாகமே சரி செய்து கொடுக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட மணமை, குன்னத்தூர், கடும்பாடி ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் தலா ₹12 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய அளவிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் வழங்கும் திட்டத்தையும் மும்பை அணுசக்தி துறை இயக்குனர் செனாய் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணமை செங்கேணி, கடும்பாடி தேன்மொழி சுரேஷ்குமார், குன்னத்தூர் ஏழுமலை மற்றும் அணுசக்தி துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருத்தம் செய்யப்பட்ட பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்: தமிழக அரசு தகவல்

திருப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு

சிவில் இன்ஜினியரை தாக்கிய பா.ம.க. நிர்வாகிக்கு வலை