Thursday, July 4, 2024
Home » ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

by Arun Kumar

சென்னை: ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் ஜூலை 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மக்கள் தாய்தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும் விருப்பமாகக் கொண்டுள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு 2022 – 2023ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் ”தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் நடத்தப்பட்ட ஆன்மிகப் பயணங்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்பெற்றனர்.

2024-2025ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில், வராகியம்மன் கோயில், பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயில், திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோயில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் மேற்கொள்ளப்படும்.

கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர் கோனியம்மன் கோயில், தண்டுமாரியம்மன் கோயில், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்.

மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில் ராக்காயியம்மன் கோயில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆடி மாத அம்மன் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது ஜூலை 19, 26, ஆகஸ்ட் 2, 9 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து வரும் ஜூலை 17ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும்.

மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111, சென்னை மண்டலத்திற்கு 99417020754, 044-29520937, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 0436-2238114, கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 0422-2244335, திருச்சி மண்டலத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi