கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகம்

*பிரித்து அனுப்பும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் மற்றும் நோட்டு புத்தகம் விநியோகம் செய்யும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய தாலுகா பகுதிகளில் 1,720 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டங்கள் என இரண்டு கல்வி மாவட்டங்களில் செயல்படுகின்றன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வருகிற ஜூன் 6ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பாடநூல் மற்றும் நோட்டு புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் உள்ள 605 அரசு தொடக்கப்பள்ளிகள், 146 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 751 பள்ளிகளும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 540 ெதாடக்கப்பள்ளிகள், 157 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 697 பள்ளிகளும், ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 165 உயர்நிலைப்பள்ளிகளும், 107 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,720 பள்ளிகளில், சுமார் 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கு வழங்கப்பட வேண்டிய இலவச பாடப்புத்கங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள தொடக்கக்க கல்வி அலுவலகங்களுக்கு வரப்பெற்றுள்ளது.

அவற்றை கல்வித்துறை அதிகாரிகள், அந்தந்த பகுதி பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 31ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசின் இலவச பாடநூல்கள் அனுப்பி வைக்கப்பட்டு விடும். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறம் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, அனைத்து பாடபுத்தங்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.

இந்த புத்தகங்கள் பள்ளிகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,720 அரசு, அரசு நிதியுதவி, நகராட்சி பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். அனைத்து பள்ளிகளுக்கும் முழு ஆண்டுத்தேர்வுகள் முடிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. வரும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அவ்வாறு பள்ளிகளில் திறக்கப்படும் நாளன்றே அனைத்து மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் பாடநூல் மற்றும் நோட்டு புத்தகங்கள் விநியோகம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆசிரிய, ஆசிரியைகள், சிறப்பாசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று, மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்றனர்.

Related posts

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து

ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-தென்ஆப்ரிக்கா பைனலில் இந்தியா பேட்டிங் தேர்வு