குழந்தையின்மைக்கு இலவச ஹோமியோபதி மருத்துவம்…

நன்றி குங்குமம் தோழி

சென்னையில் அசத்தும் அறக்கட்டளை!

‘‘இன்றைக்கு உலக அளவில் குழந்தையின்மை மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவிகிதம் பேர் குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 30 சதவிகிதம் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி பிரச்னை உள்ளது. இன்னொரு 30 சதவிகிதம் இரண்டு பேருக்கும் சேர்த்து பிரச்னை இருக்கிறது. மீதியுள்ள 10 சதவிகிதம் Unexplained infertility எனச் சொல்வோம். எல்லாம் நார்மலாக இருந்தும், குழந்தையின்மை பிரச்னை இருக்கும்.

இவற்றை ஹோமியோபதி மருத்துவத்தில் எளிதாக சரிசெய்ய முடியும். அதற்காக கடந்த ஆண்டு துவங்கப்பட்டதுதான் இந்த இலவச மகப்பேறு மருத்துவ மையம்’’ என்கிறார் டாக்டர் சந்தியா காளிதாஸ்.இவர், சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதி வளாகத்தில் இருந்து செயல்படும் இந்த இலவச ஹோமியோபதி மகப்பேறு மருத்துவ மையத்தின் சிறப்பு மருத்துவர். இந்த இலவச மகப்பேறு மருத்துவ மையம் மற்றும் குழந்தையின்மைக்கான காரணங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்தார்.

‘‘வழக்கமாக குழந்தையின்மை பிரச்னைக்கு அலோபதி மருத்துவ சிகிச்சைகளைதான் நாடுகிறோம். ஆனால், ஹோமியோபதி மருத்துவத்தில் குழந்தையின்மைக்கு சிறந்த மருந்துகள் உள்ளன. டாக்டர் கோப்பிக்கர் ஹோமியோபதி அறக்கட்டளையும், சந்திரசேகரா அறக்கட்டளையும் இணைந்து இந்த இலவச மகப்பேறு மருத்துவ மையத்தை நடத்தி வருகின்றனர். இங்ேக மகப்பேறு மருத்துவம் மட்டுமல்ல, எல்லாவித நோய்களுக்கும் இலவச ஹோமியோபதி மருத்துவம் பார்க்கிறோம். மகப்பேறு மருத்துவத்திற்கு மட்டும் புதன்கிழமை தோறும் சிறப்பு மையமாக காலை 9 மணி முதல் 12 மணி வரை செயல்படுத்துகிறோம்.

குழந்தையின்மை பிரச்னைக்கு முதலில் ரத்தம், ஸ்கேன், விந்தணு, சுகர், தைராய்டு, ஹார்மோன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதற்காக சில பரிசோதனை மையங்களுடன் இணைந்து, எங்களின் நோயாளிகளுக்கு 30 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை சலுகை வாங்கித் தருகிறோம். கடந்த ஓராண்டில் இங்ேக மகப்பேறுக்காக 35 தம்பதிகள் வந்தனர். இவர்களில் சிலருக்கு குழந்தை பிறந்துவிட்டது. மற்றும் சிலர் கருத்தரித்துள்ளனர்’’ எனச் சந்தோஷமாகச் சொல்லும் சந்தியா காளிதாஸ், தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

‘‘பொதுவாக, குழந்தையின்மைக்கு முதல் காரணம் திருமணத்தைத் தாமதமாக பண்ணுவதுதான். இன்றைய சூழலில் ஆண், பெண் இரண்டு பேருமே 30 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்கின்றனர். இரண்டாவது காரணம் திருமணம் முடிந்ததும் முதல் குழந்தையை தள்ளிப் போடுவது. இதற்கு செட்டிலாக வேண்டும் என்பது உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்தை முன்வைக்கின்றனர். இதனால், ரிஸ்க் ஃபேக்டர் அதிகமாகிவிடுகிறது. ஏனெனில், வயதாக வயதாக கருமுட்டை மற்றும் விந்தணுவின் தரம் குறைந்துவிடும்.

மூன்றாவதாக ஜட் ஃபுட் மாதிரியான உணவுப் பழக்கம், சரியான நேரத்திற்கு தூங்காதது, மன அழுத்தம், இரவு நீண்ட நேரம் முழிப்பது, உடல் பருமன், தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகள். அதனாலேயே இந்த குழந்தையின்மை பிரச்னையை லைஃப் ஸ்டைல் டிஸ்ஸாடர் என்கிறோம்’’ என்றவர், தொடர்ந்து பேசினார்.‘‘ஹோமியோபதி மருத்துவத்தில் இவை எல்லாவற்றுக்கும் சிறந்த மருந்துகள் இருக்கின்றன. இது ஒரு முழுமையான மருத்துவ முறை. இதில் மனதையும், உடல் பாகத்தையும் ஒருங்கே எடுத்துக்கொண்டு மருந்துகள் தருகிறோம். முன்பு குழந்தையின்மையை பெண்களுக்கான பிரச்னை என்றே பார்த்தார்கள். இன்று இரண்டு பேருக்குமே பிரச்னை இருக்கிறது. அதனால் தம்பதிகள் இருவருமே சிகிச்சை எடுக்க வேண்டும்.

நாங்கள் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. மருந்துகள் வழியேதான் சிகிச்சை. இந்த மருந்துகளை தொடர்ந்து நாள் கணக்கில் எடுக்க வேண்டும் என்றாலும், பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. பெண்கள் கர்ப்பக் காலத்திலும்கூட மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் இன்றைக்கு குழந்தை இல்லை என்றதும் உடனே IUI, IVF என செயற்கை கருத்தரிப்பு முறைக்கு செல்கிறார்கள். அதைத் தவறுதலாக சொல்லவில்லை. குழந்தையின்மைக்கு அது ஒரு வரப்பிரசாதம்தான்.

ஆனால் அதற்கான செலவு அதிகம் என்பதால் பல தம்பதிகள் முன்வருவதில்லை. சில சமயம் சிகிச்சை தோல்வியில் முடிந்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எங்களின் சிகிச்சை மூலம் இயற்கை கருத்தரிப்பிற்கு உகந்த சூழலை உருவாக்கி தருகிறோம். இதுதவிர, தம்பதியினருக்கு ஆலோசனைகளும் வழங்குகிறோம். மேலும் கருத்தரிக்கவும் கருத்தரித்த பிறகும் உடலுக்கு சத்தான கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட எளிமையான உணவுகளையே சாப்பிட பரிந்துரைக்கிறோம்.

குழந்தையின்மை என்பது சாபமில்லை. அந்தப் பிரச்னைக்கான சிகிச்சையை சீக்கிரமாக தொடங்குவது நல்லது. அதற்காகவே இந்த விழிப்புணர்வை கொடுத்து வருகிறோம். ஏனெனில், பிரச்னைக்கான சரியான மருந்தினை ெகாடுத்து இயற்கையாக கருத்தரிக்கச் செய்வதே எங்களின் முதன்மை நோக்கம்’’ என நம்பிக்கை மிளிரச் சொன்னார் டாக்டர் சந்தியா காளிதாஸ்.

தொகுப்பு: பி.கே

படங்கள்:ஆர்.சந்திரசேகர்

Related posts

சூர்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்…

ங போல் வளை-யோகம் அறிவோம்!

உடலுக்கு ஊட்டமளிக்கும் தங்கப்பால்!