மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை எடுக்க வேண்டாம்:  சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் வேண்டுகோள்

சென்னை: மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதற்காக, தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் பொதுமக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளார். தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடியானது தற்போது அதிகரித்துள்ளது. மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்று நம்பகமான நபர்களின் திருடப்பட்ட படங்கள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் புகைப்படங்களை பயன்படுத்தி அவர்களை போல் ஒரு போலியான கணக்கு உருவாக்குகின்றனர்.

பிறகு செயற்கை நுண்ணறிவு மூலம் டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் உருவாக்கி பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்த நண்பர், குடும்ப உறுப்பினர்கள் போல் ஆள்மாறாட்டம் ெச்யது ஏமாற்றுகிறார்கள். பின்னர் பாதிக்கப்பட்டவரின் அவசர உணர்வை உண்டாக்கி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு மிரட்டி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே, இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக பணியாளர் என கூறி கொள்ளும் ஒருவரிடமிருந்து வீடியோ அழைப்பு பெறும் போது, பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும்.

ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவை கட்டுப்படுத்துங்கள் மற்றும் சமூக ஊடகத்தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளை சரிசெய்யவும். நீங்கள் இது போன்ற வீடியோ கால் மோசடிக்கு ஆளாகியிருந்தால் உடனடியாக சைபர் க்ரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்