பல ஆயிரம் கோடி மோசடி கம்பத்தில் நியோமேக்ஸ் தலைவரின் வீடு முற்றுகை

கூடலூர்: மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து மோசடி செய்தது. இதுதொடர்பான புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இந்தநிலையில் தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் சங்கர், துணைத்தலைவர் பொம்மையசாமி, செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு கம்பம் நந்தகோபாலசாமி தெருவில் வசிக்கும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மண்டல தலைவர் தொட்டுசிக்கு என்பவரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கம்பம் எஸ்.எஸ்.ஐ நாகராஜ் மற்றும் போலீசார், போராட்டக்காரர்கள் மற்றும் தொட்டுசிக்கை காவல் நிலையம் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எஸ்ஐ பாஸ்கரன், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களின் பெயர், டெபாசிட் தொகை அடங்கிய பட்டியலை கொண்டு வரும்படி போராட்டக்காரர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

பவர்கிரிட் நிறுவனத்தில் 373 இன்ஜினியர்ஸ் டிரெய்னீஸ்

தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

இந்திய கடலோர காவல் படையில் 320 இடங்கள்