ஏற்கனவே விற்ற இடத்தினை போலி ஆவணம் தயாரித்து மோசடி: பெண் புரோக்கர் உட்பட 2 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் போலி ஆவணங்கள் தயாரித்து, விற்ற இடத்தையே மற்றொரு நபருக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட பெண் புரோக்கர் உட்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், குறிஞ்சி நகர், முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார் (40). இவர், தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட மயிலிமா நகரில் உள்ள டிடிசிபி அப்ரூவல் பிளாட் வாங்குவதற்காக ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து தாம்பரம் அடுத்த கடப்பேரியை சேர்ந்த திருமணி (45), பீர்க்கன்காரணை ஏ.எஸ்.ராஜன் நகரை சேர்ந்த ஸ்ரீதேவி (40) ஆகிய நில புரோக்கர்களிடம் உதவி கேட்டுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட திருமணி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவரும் போலி ஆவணங்களை காண்பித்து 2,800 சதுர அடி கொண்ட நிலத்தை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் சிறுக சிறுக ஆன்லைனில் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வங்கி பணம் பரிமாற்றம் மூலம் பெற்றுக்கொண்டனர்.

இதற்காக போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்து மோசடி செய்துள்ளனர். இதனையடுத்து, போலி ஆவணங்களை நம்பிய தினேஷ்குமார் மேற்படி இடத்திற்கு சென்று வீடு கட்ட முயற்சி செய்யும்போது, அந்த இடம் போலியானது என்றும், ஏற்கனவே அந்த இடத்தை மற்றொரு நபருக்கு விற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார், இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நில புரோக்கர்கள் திருமணி, ஸ்ரீதேவி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்