திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி பெயரில் ஆன்லைன் வகுப்பு நடத்தி மோசடி: மாணவி போலீசில் புகார்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்திருப்பதாக கூறி ஆன்லைன் வகுப்பு நடத்தி மூணாறைச் சேர்ந்த மாணவியிடம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த ஒரு மாணவி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த வருடம் பிளஸ் 2 படித்தார். அவருக்கு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது. கடந்த வருடம் நடந்த நீட் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றார். அதைத்தொடர்ந்து பல்வேறு மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு பிறகு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்திருப்பதாக கூறி மாணவிக்கு மெயில் வந்தது. முதல் செமஸ்டருக்கு ரூ.25 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாணவி முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் கட்டினார்.  கேரளாவிலேயே அதுவும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீட் கிடைத்ததால் மாணவியும், பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஒரு சில மாதங்கள் ஆன்லைனில் தான் வகுப்புகள் நடைபெறும் என்று கூறி ஒரு மெயில் வந்தது. தொடர்ந்து கடந்த நவம்பரில் ஆன்லைன் வகுப்புகளும் தொடங்கின.

சில மாதங்கள் கழித்து கல்லூரிக்கு நேரடியாக வரும்படி மாணவிக்கு மெயில் வந்தது. ஆனால் மறுநாளே வரவேண்டாம் என்று கூறி அடுத்த மெயில் வந்தது. இதனால் மாணவி தொடர்ந்து ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் 24ம் தேதி கல்லூரிக்கு நேரடியாக வரும்படி மெயில் வந்தது. அன்றைய தினமே தற்போதைக்கு கல்லூரிக்கு வர வேண்டாம் என்று கூறி வேறொரு முகவரியில் இருந்து மெயில் வந்தது.

இதனால் சந்தேகமடை ந்த மாணவி, பெற்றோரை அழைத்துக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றார். முதல்வரை சந்தித்தபோது தான் அது மோசடி என்பது தெரியவந்தது. அப்படி யாருக்கும் தாங்கள் மெயில் அனுப்பவில்லை என்றும், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவில்லை என்றும் கல்லூரி முதல்வர் கூறினார். இது குறித்து மாணவி மூணாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை