கள்ளக்குறிச்சி அருகே பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் கைது: இளைஞரின் வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்த நபரை கைது செய்யக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை, சேலம் நெடுஞ்சாலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தை அடுத்த வீரசோழபுர கிராமத்தை சேர்ந்த வசந்த குமார் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி துறையின் பணித்தள பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த திட்டத்தின் பணியாளர்களிடம் இருந்து வாங்கிய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வசந்தகுமார் தனது செல்போனில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய செல்போனை அதே ஊரை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரிடம் ரூ.2000க்கு அடகு வைத்துள்ளார். செல்போனை வாங்கிய தினேஷ் அதனை திறந்து பார்த்தபோது 200க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்தரித்து வைத்திருந்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த தகவல் கிராமத்திற்குள் கசியவே ஆத்திரமடைந்த பெண்கள் வசந்தகுமாரின் வீட்டை கற்களால் தாக்கினர்.

அப்போது வீட்டில் இருந்த வசந்தகுமார் தப்பியோடிய தகவல் தெரிந்த பெண்கள் அவரை கைது செய்ய வலியுறுத்தி சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த போலீசார் தப்பியோடிய வசந்தை ஊரர்பாளையம் என்ற கிராமத்தில் கைது செய்து விட்டதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்தினர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத பெண்கள் அவரை தங்கள் முன்னிலையில் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதை அடுத்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வசந்தகுமாரை வீடியோ கால் மூலமாக போலீசார் காண்பித்தபின்பும் பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கள்ளக்குறிச்சி எஸ்.பி. தலைமையில் நடைபெற்ற பலதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பெண்களின் போராட்டத்தால் சேலம், சென்னை நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Related posts

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?