பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் துணை தூதரகத்தில் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றம் கடந்த ஜூன் 9ம் தேதி கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது, தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த ஜூன் 30ம் தேதி முதல் சுற்று தேர்தல் நடைபெற்றது, தொடர்ந்து நேற்று இரண்டாவது சுற்றுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தை பொறுத்தவரை 577 தொகுதிகள் உள்ளன. முதல் சுற்றில் 12.50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர்கள் இரண்டாவது சுற்றுக்கு போட்டியிட தகுதி பெறுவார்கள். அதன்படி 76 தொகுதிகளில் முதலிடம் பிடித்தவரை தவிர வேறு யாரும் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறாததால் 76 எம்பிக்கள் ஏற்கனவே தேர்வாகிவிட்டனர்.

இந்நிலையில், மீதமுள்ள 501 தொகுதிகளுக்கு இரண்டாம் சுற்று வாக்குப்பதிவும், ஆசிய நாடுகளுக்கான ஒரு தொகுதிக்கும் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்கும் வகையில் நான்கு வாக்குப்பதிவு மையங்கள், புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரெஞ்ச் தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. ஆசிய நாடுகளின் தொகுதிக்கு முதல் சுற்று தேர்தலில் 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், தற்போது 2 பேர் மட்டுமே இரண்டாவது சுற்றில் உள்ளனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்