மாஜி அமைச்சரின் செல்வாக்கை குறைக்க நடக்கும் சதி வேலை பற்றி கூறுகிறார்: wiki யானந்தா

‘‘சிக்கலான இடங்களையும் சேல்ஸ் பண்ணி காசாக்கும் அதிகாரிங்க மேல எந்த ஆக்‌ஷனும் இல்லையாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலத்துக்கு புகழ்பெற்ற ஊர்ல, சமீபத்தில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்துச்சு.. அப்போ, அங்கிருந்து பதிவு ஆவணங்களை கைப்பற்றி விசாரிச்சதுல பல பகீர் தகவல்கள் கிடைச்சிருக்காம்.. அதாவது கிரிவலம் நகரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்னு அறிவிப்பு வெளியானதால, மாநகராட்சியாக தரம் உயர்ந்தா, பதிவு கட்டணம் உயரும், விதிமுறைகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்குது.. இதனால, வரன்முறை செய்யப்படாத வீட்டுமனைகளை எல்லாம், அவசர அவசரமாக பத்திரப்பதிவு செய்திருக்காங்க.. அதிகாரிகளின் ஆதரவோட இடைத்தரகர்கள் மூலமாக இந்த முறைகேடு கொடிகட்டி பறந்திருக்குது.. அதோட, சில வருஷமா கிரிவலத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து கூட்டம் அதிகம் வருது.. குறிப்பா, வெளி மாநிலத்தில் இருந்து வர்றவங்க, சொந்தமா ஒரு இடம் வாங்கணும்னு ஆசைப்படுறாங்களாம்.. மெட்ராஸ், ஆந்திரான்னு வசதியானவங்க, சினிமா பிரபலங்கள்னு கிரிவல ஊர்ல ஒரு இடத்தை வாங்கி போடுறாங்களாம்.. இதனால பிளாட் ரேட் கிடுகிடுனு ஏறிடுச்சாம்.. அந்த சந்தர்ப்பத்த பயன்படுத்திய இடைத்தரகர் கும்பல், விற்காத வீட்டுமனைகளையும், விதிமுறைகள் இல்லாத, வரன்முறை செய்யாத சிக்கலான இடங்களையும் விற்பனை செஞ்சி காசாக்கிட்டு இருக்காங்களாம்.. அதுக்கு, பதிவு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்திருக்காங்களாம்.. விஜிலென்ஸ் தொடர்ந்து விசாரிச்சா, இன்னும் பல மோசடிங்க வெளிச்சத்துக்கு வரும்னு பரபரப்பா பேசிக்கிறாங்க.. இவ்ளோ நடந்தாலும், சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரிங்க மேல எந்த ஆக்ஷனும் இல்லையாம்.. சும்மா பக்கத்து ஊருக்கு டிரான்ஸ்பர் செஞ்சிட்டு கண்டுக்காம விட்டுடுறாங்களேன்ன பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி அமைச்சரின் செல்வாக்கை குறைக்க ஆதரவாளர்களை ஸ்கெட்ச் போட்டு இழுக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்குதாமே சேலத்துக்காரர் டீம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ தேனிக்காரரின் அணியில் இருந்து வர்றாரு.. இவருக்கு நெற்களஞ்சியம் மட்டுமல்லாமல் டெல்டா மாவட்டம் முழுவதும் ஆதரவாளர்கள் இருக்காங்க.. இதனால் வைத்தியானவரின் ஒட்டு மொத்த ஆதரவாளர்களையும் இலைகட்சிக்கு இழுப்பதன் மூலம் டெல்டாவில் தேனிக்காரருக்கு செக் வைக்க முடியும்னு சேலத்துக்காரர் நம்புகிறாராம்.. ஆரம்பத்தில் வைத்தியானவரின் ஆதரவாளர்களில் ஒரு சிலர் மட்டும், சேலத்துக்காரர் அணியில் ஐக்கியமானாங்க.. தொடர்ந்து வைத்தியானவருக்கு நெருங்கிய நபர்கள் அனைவரையும் இலை கட்சிக்கு விரைவில் இழுத்துடணும்.. இதன் மூலம் வைத்தியானவருக்கு இருக்கும் செல்வாக்கை முழுமையாக குறைக்கணும்னு சேலத்துக்காரர் தனது டீமுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்காராம்.. தொடர்ந்து டெல்டா மாவட்டம் முழுவதும் வைத்தியானவரின் நெருங்கிய ஆதரவாளர்களை இழுப்பதற்கான வேலையில் சேலத்துக்காரர் டீம் இறங்கிட்டாங்களாம்.. இதற்காக ‘விட்டமின் ப’ அள்ளி இறைக்கிறாங்களாம்.. இந்த தகவல் தெரிய வந்த வைத்தியானவர் இதுபற்றி கண்டுகொள்ளவே இல்லையாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியில் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க முட்டுக்கட்டை போடும் ஐவரணி மீது நிர்வாகிங்க புகார் வாசிக்க தொடங்கிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குமரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னால பா.ஜ. முன்னாள் எம்.எல்.ஏ., மறைந்த வேலாயுதன் மணிமண்டப திறப்பு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்துச்சாம்.. கூட்டத்தில, கட்சியில் மீண்டும் எழுச்சியை கொண்டு வர பிற கட்சிகள் போல் குமரியை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டமாக பிரிக்கவும், மேற்கு மாவட்டத்தில் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவரை தலைவராகவும், கிழக்கு மாவட்டத்தில் வேறு சமூகத்தை சேர்ந்தவரை தலைவராக நியமிக்கணும்னு பெரும்பாலான நிர்வாகிகள் பரிந்துரை செய்தாங்களாம்.. ஆனால், குமரியில் கட்சியை ஆட்டுவிக்கும் ஐவரணியில் கண்ணபிரானின் வேறு பெயர் கொண்ட இருவர் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது என்ற பேச்சே கூடாதுன்னு எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம்.. தர்மமான தலைவரும் இதற்கு மறைமுக ஆதரவாம்.. இப்படியே கோஷ்டி பூசல் தொடர்ந்தால் கட்சி எம்.பி., மட்டும் அல்ல எம்.எல்.ஏ., தேர்தலில் கூட தேறாதுன்னு ஐவரணி மீது கட்சி நிர்வாகிகள் புகார் வாசிக்க தொடங்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராமே அல்வா தொகுதியின் எம்எல்ஏ…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா… அவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல் வழக்கில் உட்கட்சி எதிரிகள் சிக்க வைச்சாங்க. இதன் மூலம் அல்வா தொகுதி எம்எல்ஏவை வசமாக மாட்டி விட்டதாக தேசிய கட்சியினர் சிலர் உள்ளூர மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் தற்போது மலையான மாநில தலைவரின் பதவி ஆட்டம் கண்டிருக்கு. இலை கட்சியுடன் கூட்டணி ‘டமால்’ ஆகி விட்டதால் தமிழ்நாட்டில் தொகுதிகள் பறிபோய் விட்டது. மிஞ்சியது முட்டை தான். எனவே மலையான தலைவரை மாற்றும் பிளானில் தேசிய கட்சி தலைமை இருக்கிறதாம். இலை கட்சியினருடன் அணுக்கமாக செல்பவரை மாநில தலைவராக்க அந்த கட்சி தலைமை யோசிக்கிறதாம். இதனால் அல்வா தொகுதியின் எம்எல்ஏவை மாநில தலைவராக்கி விடலாம் என்ற யோசனையில் இருக்கிறார்களாம். எம்எல்ஏ காதுக்கு இந்த செய்தி வந்து சேர அவரது ஆதரவாளர்கள் மனம் குளிர்ந்து போய் இருக்கிறார்களாம். எங்கள் பணத்தையும் பறிகொடுத்து, வழக்கில் சிக்க வைத்து முதுகில் குத்தினார்கள். ஆனால் அதுவே சுவற்றில் அடித்த பந்து போல் ஆகிடுச்சு… அவர்களுக்கு விரைவில் ஷாக் கொடுக்கப் போகிறோம். அடுத்த மாநில தலைவர் நாங்கள் தான் என அல்வா தொகுதியின் எம்எல்ஏ ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டாத குறையாக கூறி வருகின்றனர்.’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் – படாபரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலி