புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று 92வது பிறந்தநாள். இதையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: அரசியலில் எளிமை, கண்ணியம் மற்றும் புத்திசாலித்தனத்தின் உருவகம் மன்மோகன் சிங் ஆவார். அவருடைய பிறந்தநாளையொட்டி இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் தொலைநோக்கு அரசியல்வாதி. அவரது வார்த்தைகளை விட செயல்கள் தான் அதிகம் இருக்கும்.
இந்த நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: மன்மோகன் சிங்குக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உங்கள் பணிவு, ஞானம் மற்றும் தன்னலமற்ற சேவை எனக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பெற விரும்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இதே போல் காங்கிரசை சேர்ந்த பல தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.