மாஜி மந்திரிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கும் இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா


‘‘சமூக இயக்கங்களை வைத்து அதிகாரிகளை எல்லாம் அடிபணிய வைத்து சாதித்து விட்டாராமே புல்லட்சாமி..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் எம்பிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அதிகாரிங்க தரப்பு வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக சமூக இயக்கங்கள் ஒன்று திரண்டு வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்காங்க.. இதனால் ஆடிப்போன அதிகாரிகள் தரப்பு, ரகசிய கூட்டம் நடத்தி புல்லட்சாமியை சந்தித்து முறையிட்டாங்களாம்.. அப்போது நான்தான் பவர்புல் என்பதை சூசகமாக அதிகாரிகள் தரப்புக்கு வெளிப்படுத்திய புல்லட்சாமி, பிரச்னையை கண்டும் காணாமல் இருந்தபடி வந்தவர்களை திருப்பி அனுப்பிட்டாராம்.. அதன்பிறகு இந்த விவகாரத்தில் புல்லட்சாமி தரப்பு அளித்த ஒப்புதலுக்கும் அதிகாரிகள் தரப்பு முட்டுக்கட்டையாக நீடித்த நிலையில் பிரச்னை மேலும் பூதாகரமாயிருக்கு..

அடுத்ததாக அழுகிய தக்காளி, முட்டையுடன் போராட்டத்துக்கு யாரும் வர வேண்டாம்… இதற்கான நேரம் தேதி சஸ்பென்ஸ்… என சமூக இயக்கங்கள் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டவே அடுத்தகட்ட பீதியில் உறைந்துட்டாங்க அதிகாரிகள் தரப்பு.. எம்பிசி இடஒதுக்கீடு தொடர்பாக சமூக இயக்கங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அரசு தரப்பு அளித்த கோப்புக்கு அதிகாரிகள் வேறுவழியின்றி பச்சைக்கொடி காட்டிய நிலையில் இந்த விவகாரமும் முடிவுக்கு வந்ததாம்.. தனது திட்டத்தை சமூக இயக்கங்களை வைத்து அதிகாரிகளை அடிபணிய வைத்து சாதித்துக் காட்டிட்டாரு புல்லட்சாமி என்ற ஹைலெட் ஊர்முழுக்க ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சின்ன மம்மியின் அடுத்த ரகசிய திட்டத்தை தெரிந்து கொண்ட சேலத்துக்காரர் மாஜிக்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் இணைவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை சின்னமம்மி மேற்கொண்டு வந்தாலும் அனைத்தும் எடுபடவில்லை.. இதனால், தென் மாவட்டங்களில் திடீரென சுற்றுப்பயணம் செய்தாரு.. அதுவும் பெரிய அளவுக்கு எடுபடாததால் சின்னமம்மி கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.. தொடர்ந்து, ‘ரகசிய திட்டம்’ ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.. தென் மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த அவர் முடிவு செய்திருக்கிறாராம்.. அதன்பின்னர், டெல்டாவில் செயல்படுத்த முடிவு செய்துள்ளாராம்.. இந்த தகவல் சேலத்துக்காரரின் கவனத்துக்கு சென்றுள்ளதாம்.. உடனே, இலை கட்சியின் மாஜி அமைச்சர்களை கண்காணிப்பு வளையத்தில் சேலத்துக்காரர் கொண்டு வந்துள்ளாராம்.. குறிப்பாக, டெல்டா, தென் மாவட்டங்களில் உள்ள இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு போட்டுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அமைச்சர் பேச்சால் ஆடிப்ேபான நிர்வாகிகள் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளிடம் வசூலிச்ச ஆயிரங்களை திரும்ப கொடுத்துட்டதா சொல்றாங்களே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடு வழங்குறாங்க.. இதுல பயனாளிகளை தேர்வு செஞ்சி, அனுமதி ஆணையும் வழங்குனாங்க.. ஆனா சில மாவட்டங்கள்ல ஊர் ஆட்சி மன்றத்தோட பிரசிடெண்டுகளும், சில உள் ஆட்சி பிரதிநிதிகளும் சில ஆயிரங்களை வசூலிச்சதாக புகார்கள் வந்திருக்குது.. இதனால வெயிலூர் மாவட்டத்துல நடந்த நிகழ்ச்சியில நீர்வள அமைச்சர் பேசும்போது, இதுக்கு போயி பிச்சை எடுக்கலாம். யாராவது லஞ்சம் கேட்டா கலெக்டர் கிட்ட, என்கிட்ட புகார் சொல்லுங்க. எந்த கொம்பனுக்கும் ஒரு பைசா கொடுக்கக்கூடாதுன்னு பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்குது..

இதனால் ஆடிப்போன ஊர் ஆட்சி மன்ற தலைவருங்க வாங்குனதை திருப்பி கொடுத்துட்டாங்களாம். இதனால பயனாளிங்க நிம்மதி அடைஞ்சிருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு வசூல் தட்டி எடுக்கும் பெண் அதிகாரி யாரு…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெரிய நெகமம் சார் பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் பணியிடம் காலியாக இருக்கு.. அதனால், அந்த அலுவலகத்தில் ஹெட் கிளார்க் பணியில் உள்ள நான்கெழுத்து பெயர் கொண்ட பெண் ஊழியர் ஒருவர் இப்பணியை கூடுதலாக கவனிசிட்டு வருகிறாரு.. இவர், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், கரன்சி குவித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.. இப்பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு, கெத்து காட்டி வருகிறாராம்…

கட்டிடங்கள் உள்ள இடத்தை காலியிடம் என குறிப்பிட்டு, பத்திரம் பதிவுசெய்து கொடுக்கிறாராம்.. குறிப்பாக, நெகமம் அருகே சோழனூர் ஊராட்சி பகுதியில் மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு நிறுவனம் வீட்டுமனைகளை பிரித்து வீடு கட்டிக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருதாம்.. அப்பகுதியில் வீடு கட்டியுள்ள இடத்தை, காலியிடம் என்று குறிப்பிட்டு, பத்திரம் பதிவு செய்து கொடுக்கிறாராம்.. இதனால், இவர் அடைந்த பலன்கள் ஏராளமாம்.. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறதே என்பதுபற்றி கவலைப்படாமல், தனது நலன் பற்றி மட்டுமே கவலைப்பட்டு வருகிறாராம்.. ஒரு பக்கம் சம்பளம், இன்னொரு பக்கம் கிம்பளம்… என தட்டி அள்ளுகிறாராம்.. `எனக்கு, மேலதிகாரிகளின் சப்போர்ட் இருக்கிறது… என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’னு வெளிப்படையாக சொல்லிக்கொண்டு, வசூல் தட்டுகிறாராம் பெண் அதிகாரி..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘செயல் அலுவலரும், கிளார்க்கும் மல்லுகட்டுவதால் அடிப்படை வசதிகள் முடங்கி கிடக்கிறதா பேரூராட்சி மக்கள் புலம்புறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் வில்லுக்குறி பேரூராட்சியில் கிளார்க்காக இருப்பவர், தான்தான் செயல் அலுவலர் என்பதுபோல் நடந்துக்கிறாராம்.. இதனால் செயல் அலுவலரும், கிளார்க்கும் மல்லு கட்டும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறதாம்.. இதற்கு முன்பு இந்த பேரூராட்சியில் பெண் செயல் அலுவலர்கள் இருந்தாங்களாம்.. அப்போதும் ஒரு குட்டி செயல் அலுவலராகவே கிளார்க் வலம் வந்திருக்கிறாரு.. தற்போது வேலூரில் இருந்து மாறுதலாகி வந்த செயல் அலுவலரிடமும் அதேபோல் நடந்துகொள்கிறாராம்.. இவர்களுக்குள் அடிக்கடி வார்த்தை போர் நடத்துகிறார்களாம்.. இதனால், கிளார்க், பணிகள் எதுவுமே செய்வதில்லையாம்..

அனைத்து பைல்களும் கிளார்க் டேபிளில் குவிந்து கிடப்பதோடு, காணாமல் போகும் சம்பவங்களும் அடிக்கடி நடக்குதாம்.. அடிப்படை தேவைகளுக்காக செல்லும் மக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து திரும்பும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் வருது.. ஒரே பேரூராட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் கிளார்க், தான் நினைத்ததே இங்கு நடக்கும்னு செயல்பட்டு வருவதால் பேரூராட்சியில் சுத்தம், சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு என பல்வேறு அடிப்படை பணிகள் காசோலைகள் கொடுக்காமல் முடங்கிபோய் கிடக்கிறதாம்… மேல் அதிகாரிகள்தான் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளதாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்