மாஜி மந்திரியுடன் மோத தயாராகி வரும் மாஜி எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேர்தல் சமயத்தில் வெடிக்காததால் பட்டாசு திட்டத்துக்கு வேட்டு வைத்த பவர்புல் நிர்வாகியால் புல்லட் சாமி தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறதா பேச்சு ஓடுகிறதே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் கடந்தாண்டு ஒளிமயமான பண்டிகைக்கு ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் 500 பட்டாசு பாக்ஸ் மற்றும் சுவீட்ஸ், காரம் என அள்ளி வீசப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து புல்லட்சாமியின் இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய தரப்பு பச்சைக்கொடி காட்டியது. ஆனால் தேர்தல் முடிவோ நேர் எதிர்மறையானது.

பெரும்பாலான ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளின் தொகுதிகளில் ‘ப’ விட்டமின் கொடுத்தும்கூட எதிர்பார்த்த வாக்கு வங்கி இல்லை. வெடிக்காத பட்டாசாக இத்திட்டம் தோல்வியுற விரக்தியுடன் கூட்டணியில் பயணிக்கும் ஒன்றிய தரப்பு கட்சியானது, அவ்வப்போது புல்லட்சாமிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனிடையே இந்தாண்டும் ஒளிமயமான அந்த பண்டிகைக்கு பட்டாசு பாக்ஸ் வழங்க முடிவெடுத்த புல்லட்சாமி, மாநில நிர்வாகியின் அனுமதியை கோரினாராம். ஆனால் நிதி பற்றாக்குறையை சுட்டிக் காட்டிய ஆளுமை மிக்கவர், கோடிக்கணக்கில் இதற்கு செலவு செய்ய வேண்டுமா என்று தடாலடி கேள்வி எழுப்பி நிராகரித்து விட்டாராம்.

இதனால் புல்லட்சாமி தரப்பு கடும் அப்செட்டில் இருப்பது பற்றிதான் புதுச்சேரியில் அரசல்புரசல் பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தில்லாலங்கடி வேலைக்கு பெயர்போன போலீஸ் அதிகாரியை ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் மாற்றினால் மட்டும் போதாதுன்னு குரல் ஒலிக்குதாமே.. எங்கே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடைக்கோடி மாவட்டத்தில் கோட்டை அமைந்துள்ள ஊரை உள்ளடக்கிய காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருத்தர், அந்த மாவட்டத்தில் மீனவர்கள், துறைமுகம் அமைந்துள்ள ஊரில் உள்ள காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அனைத்து தில்லாலங்கடி வேலைகளும் இவருக்கு அத்துப்படியாம்.. பசை படிகிறது என்றால், எப்படி வேண்டுமானாலும் வழக்கு போடுவாராம்.. சமீபத்தில் ஒரு ரவுடி மீது அளிக்கப்பட்ட புகாரையே பொய்யாக்கி விட்டாராம்.. சம்பந்தப்பட்ட ரவுடிக்கே போன் போட்டு பேசி, அவரையும் ஒரு புகார் கொடுக்க சொல்லி இரு தரப்பு புகாரை பதிவு செஞ்சு, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து இருக்கிறாரு.. இந்த விவகாரம் மாவட்ட உயர் அதிகாரி கவனத்துக்கு போய், கடைசியில ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் மாத்தி இருக்காங்க..

இப்படிப்பட்ட ஆய்வாளரை ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் மாற்றாமல், ஆயுதப்படைக்கு மாற்றணும். சட்டம் -ஒழுங்கில் இவரு இருந்தாருன்னா, சந்தி சிரிக்கும் என்றும் அப்பகுதியினர் பேசிக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குக்கர்காரர் முகாமுக்கு போயிட்டு திரும்பி வந்த மாஜி எம்எல்ஏ பதவிக்காக மாஜி பால்வளத்துறை அமைச்சருடன் மோதி பார்க்க தயாராகிவிட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்டத்தில் இலைக்கட்சியின் மாஜி பால்வள அமைச்சரின் கை ஓங்கி இருந்தது. கடந்த எம்எல்ஏ தேர்தலில் தோற்றதால் தற்போது பழைய பரபரப்பின்றி காணப்படுகிறாராம் அவர்.

இவருக்கு நெருக்கமாக இருந்தவர் காராச்சேவு புகழ் தொகுதி மாஜி எம்எல்ஏ. இருவருக்கும் மோதல் ஏற்பட்டு குக்கர்காரரின் முகாமிற்கு தஞ்சம் புகுந்தார்.. பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் இலைக்கட்சியில் ஐக்கியமாகி, பால்வளத்துடன் பழையபடி நெருக்கமாக வலம் வந்தார். தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் டிஷ்யூம்… டிஷ்யூம்… ஆரம்பித்திருக்கிறதாம்.. தற்போது இவர், காராச்சேவு தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்து பால்வளத்தால் விரட்டி விடப்பட்டவரும், தூங்கா நகரின் புறநகர் தொகுதி மாஜி அமைச்சருமான உதயமானவருடன் கைகோர்த்துள்ளாராம்..

உதயமானவர் தற்போது பேரவையில் முக்கிய துணை பொறுப்பில் உள்ளதால், அவரது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் காராச்சேவு தொகுதி அல்லது மா.செ பதவியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளாராம்.. இதனால் பால்வளத்துடன் மோதி பார்க்கலாம் என களத்தில் குதித்திருக்கிறாராம். மேலும், தனது படை பரிவாரங்களுடன் அடிக்கடி சேலத்துக்காரரையும் சந்தித்து வருகிறாராம்.. இதனால், அப்செட் மோடில் உள்ள பால்வளம், இதை எப்படி சரி கட்டுவதுன்னு தனது ஆதரவு வட்டத்துடன் அடிக்கடி ஆலோசித்து வருகிறாராம்..

இலைக்கட்சியில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றம்தான் மெடல் மாவட்ட அரசியல் களத்தில் தற்போது பொங்கி வருகிறது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஓட்டு சரிவுக்கு மாஜி மந்திரி சொன்ன காரணத்தால, இலை பார்ட்டிகளுக்கு இடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டிருக்காமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் வந்தா வாசி வெஸ்ட் ஒன்றியத்துல இலை பார்ட்டியோட செயல் வீரர்கள் கூட்டம் நடந்துச்சு.. அதுல தமிழ்கடவுள் பெயர் கொண்ட மாஜி மந்திரி கலந்துகிட்டு, நிர்வாகிங்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படணும்..

நடந்து முடிஞ்ச நாடாளும் மன்ற எலக்‌ஷன்ல பூத் கமிட்டி மெம்பர்ஸ் சரியாவே செயல்படல, அவங்ககிட்ட கொடுத்த ப விட்டமின் சரியான முறையில பயன்படுத்தபடலன்னும், ஒரு சிலர் அவங்களே எடுத்துக்கிட்டதாகவும் புகார் சொல்றாங்க.. அதுதான், இந்த சட்ட மன்ற தொகுதியில இலையோட ஓட்டு சரிவுக்கு காரணம்னு ஸ்பீச் கொடுத்திருக்காரு.. இதைக்கேட்டு கடுப்பான நிர்வாகிங்க, கூட்டம் முடிஞ்ச பின்னாடி, பூத் கமிட்டி நிர்வாகிங்க கிட்ட கொடுத்த ப விட்டமின் சரியா பயன்படுத்தல, அவங்களே எடுத்துக்கிட்டதாக சொல்றாரே,

அவரு இப்படி பேசலாமா? பல பூத்களுக்கு மாவட்ட பொறுப்பாளருங்களே ப விட்டமின் கொடுக்கல, இதையெல்லாம் நாங்க யார்கிட்ட போய் சொல்றதுன்னு, கூட்டத்துல ஏற்பாடு செஞ்ச உணவையும் சாப்பிடாம மனசு வருந்தி போனாங்களாம்.. இதை பார்த்த இலைபார்ட்டிகளே, இருக்குறவங்களையும் இவங்களே பேசி, பேசி அனுப்பி வெச்சிடுவாங்க போல இருக்குதேன்னு பரப்பாக பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

 

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்