கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா பாஜவில் இணைந்தார்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் பாஜவில் நேற்று இணைந்தார். கேரளாவில் நீண்ட நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் கருணாகரன். 2010ம் ஆண்டு இவர் காலமானார். கருணாகரனின் மகன் முரளீதரன் தற்போது வடகரை தொகுதி எம்பியாக உள்ளார். மகள் பத்மஜா வேணுகோபால் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். இந்நிலையில் பத்மஜா வேணுகோபால் பாஜவில் சேரப்போவதாக தகவல்கள் பரவின.

ஆனால் இவர் தன்னுடைய முகநூலில் அதை திட்டவட்டமாக மறுத்தார். தான் ஒருபோதும் பாஜவில் சேரப்போவதில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனால் பத்மஜா வேணுகோபால் நேற்று திடீரென பாஜவில் சேர்ந்தார். டெல்லியிலுள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் இவருக்கு பாஜ உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜ கேரள மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி சமீபத்தில் பாஜவில் சேர்ந்த நிலையில் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலும் பாஜவில் சேர்ந்துள்ளது கேரள காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பத்மஜா வேணுகோபால் கூறியது: கடந்த சில வருடங்களாகவே காங்கிரஸ் கட்சி என்னை புறக்கணித்து வந்தது. குறிப்பாக கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னர் என்னை கட்சியிலிருந்து ஓரங்கட்ட தொடங்கினர். இது குறித்து கட்சி மேலிடத்திற்கு பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய தந்தை கருணாகரனுக்கும் இதே நிலைமை ஏற்பட்டது. சோனியா காந்தி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரை சந்திக்க பல முறை அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் என்னை புறக்கணித்ததால் தான் நான் கட்சி மாறினேன். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘தந்தை கருணாகரனின் ஆத்மா மன்னிக்காது’
பத்மஜா வேணுகோபாலனின் அண்ணனும், எம்பியுமான முரளீதரன் கூறியது: எனது தங்கை பத்மஜா வேணுகோபால் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். அவருடன் இனி எந்த உறவும் வைத்துக்கொள்ள மாட்டேன். அண்ணன் என்ற பாசத்தை என்னிடமிருந்து அவர் இனி எதிர்பார்க்க முடியாது. தந்தை கருணாகரனின் ஆத்மா அவரை ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்