ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.500 கோடி மதிப்பிலான அசரவைக்கும் பங்களா: இணையதளத்தில் வைரல்

சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.500 கோடி மதிப்பில் கட்டி முடித்துள்ள பங்களாவின் வீடியோவை ஆளும்கட்சி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். இந்த எதிர்பாராத தோல்வியால் அவரது கட்சி ஆட்சியை இழந்தோடு மட்டுமல்லாமல் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பல்வேறு பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலை பிடித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. அவர் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன் பகுதி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறி இடிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்ல, பல்வேறு பிரச்னைகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் மலையை ஆக்கிரமித்து தனக்காக சொகுசு மாளிகை கட்டிய விவகாரத்தில் அவர் சிக்கியிருப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளி உலகுக்கு தெரியாத இந்த சொகுசு பங்களாவின் அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பங்களா கிட்டத்தட்ட ரூ.500 கோடி மதிப்பில் ஜெகன்மோகன் கட்டியதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இந்த பிராமாண்டமான வீட்டை தேர்தல் முடிவுக்கு பின்பு கிரகபிரவேசம் செய்ய இருந்ததாகவும், வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு அதை முதல்வரின் முகாம் அலுவலகமாக பயன்படுத்த முடிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பங்களா கட்டும் பணிகள் அனைத்தும் யாரும் அறியாத வகையில் மூடி மறைக்கப்பட்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. கட்டத்தை சுற்றி முள்வேலி அமைத்து மக்களிடம் இருந்து அந்த மாளிகை முழுமையாக மறைக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் தான் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வெள்ளை மாளிகை என்றால் அது தாஜ்மஹால் தான். ஏனென்றால் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.
அதையே மிஞ்சும் அளவிற்கு ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள ஜெகன்மோகனின் பிரம்மாண்டமாக பங்களா நவீன கால அரண்மையாக பார்ப்பவர்களின் கண்களை பறிப்பதாக உள்ளது. 12 படுக்கையறைகள் மற்றும் 1,41,422 சதுர மீட்டர் பரப்பளவில் 3 அரண்மனைகளும் ருஷிகொண்டா மலைகளை செதுக்கி கட்டப்பட்டுள்ளதாம். மேலும், கண்ணாடிகள், கிரானைட்களுடன் கட்டப்பட்ட இந்த அரண்மனையும், அதற்கான செலவுகளும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு உள்ளது.

படுக்கை அறையில் ஆரம்பித்து முகம் பார்க்கும் கண்ணாடி, குளியல் டப், கழிப்பறையில் உள்ள கபோடுகள், வால் சீட்டுகள் என அனைத்துமே வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவையாம். இதில் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு மின்விசிறியும் ரூ.7 லட்சம் மதிப்பிலானது என்றும் கூறப்படுகிறது. பணக்காரர்கள் கூட வாயை பிளக்கும் அளவிற்கு ஒவ்வொன்றும் மிக ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிலும், வீட்டிற்கு வெளியே தோட்டம் அமைக்க, இந்தியாவிலேயே அறியப்படாத செடி வகைகளில் ஆயிரம் செடிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தோட்டம் அமைத்துள்ளதாகவும் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். அவைகள் மீது வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனராம். இவற்றிற்கு மட்டும் ஏறத்தாழ ரூ.20 கோடி வரை செலவு செய்துள்ளனர்.

இந்த பங்களாவை நவீன கால அரண்மனை என்றே சொல்லலாம் என்கிறார்கள். இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் எலக்ட்ரிக் வேலை பார்த்துள்ளனர். இது எல்லாமே வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. வீட்டின் வெளிப்புற சுவர்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் மின்விளக்குகள் எல்லாம் டெல்லியிலிருந்து வாங்கப்பட்டவை. அவை ஒவ்வொன்றும் ரூ.26 ஆயிரமாகும். மேலும், வீட்டிற்கு உள்ளே உள்ள சுவர்களை அலங்கரிப்பதற்கு மட்டும் 4 ஆயிரம் மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவல்களுடன் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவான காந்தா ஸ்ரீநிவாஸ் நேரில் சென்று பார்வையிட்டு, இந்த பங்களா போன்ற நவீன கால அரண்மனை தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பது பார்ப்பவர்களை கிரங்கடித்து வருகிறது.

* கிழக்கு கடற்கரை சாலையில் ரெட்டி உறவினர்கள்
சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் நேற்றுமுன்தினம் இளம்பெண் ஒருவர் ஓட்டி வந்த கார் ஏறி, பிளாட்பாரத்தில் தூங்கிய வாலிபர் பரிதாபமாக நசுங்கி இறந்தார். அந்த காரை ஓட்டிய பெண், ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பீடா மஸ்தானின் மகள் பீடா மாதுரி என்பது தெரியவந்தது. இதையடுத்து, வாலிபரை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் பீடா மாதுரி கைது செய்யப்பட்டார். ஆனால் ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபரின் உறவினர்கள், குற்றவாளியை ஜாமீனில் விடுவித்ததை எதிர்த்து நேற்று மறியலில் ஈடுபட்டனர். வழக்கில் இருந்து தப்பிக்க நினைக்கின்றனர். புனேயில் சிறுவன் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆரம்பத்தில் பணம் விளையாடியது. பின்னர் கடும் விமர்சனங்கள் வரவே, அவ்வழக்கில் சிறுவனும் அவனது குடும்பத்தினரும் வரிசையாக கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் இந்த வழக்கையும் நடத்த வேண்டும். குற்றவாளியை தப்ப விடக்கூடாது என அவர்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய, புதிய பங்களாக்கள் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பங்களாவும் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இவ்வாறு ஏராளமாக முளைத்துள்ள பங்களாக்களில் பெரும்பாலானவை ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர்களின் பங்களாக்களே. அங்கு பல வழிகளில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு கலாஷேத்ரா காலனி, நீலாங்கரை, உத்தண்டி உள்ளிட்ட இசிஆர் பகுதி முழுவதும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.

* பளிங்கால் இழைக்கப்பட்ட சுவர்கள்
இந்த மாளிகையின் சுவர்களிலும் பளிங்கு கற்கள்(மார்பிள் ) பதிக்கப்பட்டுள்ளன. கிரானைட் மற்றும் மார்பிள் வியட்நாம், ஸ்பெயின், நார்வே, இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தகவல் கிறுகிறுக்க வைக்கிறது. படுக்கையறைகள் மற்றும் மீட்டிங் ஹால்கள் பிரகாசமாக ஜொலிக்கும் வகையில், வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* தங்க நிறத்தில் ஜொலிக்கும் படுக்கை அறை
படுக்கையறை வெளிர் தங்க நிறத்தில் மின்னுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரானைட்கள் எல்லாம் இத்தாலிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு கிரானைட் கற்களும் ஒரு சதுர அடிக்கு ரூ.1500 என பல லட்சம் செலவு செய்து பார்த்து பார்த்து கட்டப்பட்டுள்ளதாம். மேலும் கட்டில் மெத்தை, நாற்காலிகள், டேபிள்கள் என அனைத்தும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்ட அலமாரிகள் பதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலையிலிருந்து வங்காள விரிகுடா கடலை பார்ப்பதற்காகவே பெரிய பெரிய அளவிலான ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்சார் மூலம் திறக்கும் வகையிலான பிரமாண்ட திரை சீலைகள் உள்ளது.

* தங்கமாக ஜொலிக்கும் கழிவறை குழாய்
ரூ.36 லட்சத்தில் பாத் டப் வைக்கப்பட்ட கழிப்பறையில் குழாய் கூட தங்கமாய் ஜொலிக்குது.

* அரசு நிலம்
ருஷிகொண்டா மலை முழுவதும் முழுவதும் வருவாய்த்துறை நிலம். சர்வே எண் 19ல் உள்ள 70 ஏக்கர் மலை இன்னும் அரசு நிலமாக உள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்காக சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அதன் உரிமைகள் அந்த துறைக்கு மாற்றப்படவில்லை.

* ரூ.36 லட்சத்தில் பாத்டப்
மிக ஆடம்பரமான முறையில் 480 சதுர அடி வரை ஸ்பா மற்றும் கழிப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் கழிப்பறைகள் உட்பட முழு வளாகமும் குளிரூட்டும் வசதியை கொண்டுள்ளது. மேலும் குளிர்காலத்தில் ஹீட்டர் வசதியும் உள்ளது. இவை சீதோஷ்ண நிலைக்கேற்ப தானாகவே இயங்கும் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், டாய்லெட்டில் வைப்பதற்காக சில பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். அவைகளின் மதிப்பு ரூ.15 லட்சமாகும். ஜெகன் குளிக்க அமைக்கப்பட்டுள்ள பாத்டப்பின்(குளியல் தொட்டி) மதிப்பு மட்டும் ரூ.36 லட்சம் ஆகும். ஆக மொத்தம் ஒவ்வொரு டாய்லெட்டுக்கும் ரூ.1 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாம்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு