இலை கட்சி மாஜி மந்திரிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட தாமரை ஆதரவாளர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை கூட சங்காத்தமே இல்லை என்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அந்தக் கட்சி ஆதரவாளர்களைத் தான் தேடிப் போனார்களாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படாது என தெளிவாக அரசு அறிவிப்பு வெளியிட்டும் கூட, ‘நாங்க போராட்டம் பண்ணியே தீருவோம்’ என்று இல்லாத விஷயத்தை, இருப்பதாக பாவ்லா காட்டி இலை கட்சியினர் தூங்கா நகரில் நடத்திய உண்ணாவிரத போராட்டம் பொதுமக்களுடன், கட்சியினரையும் முகச்சுழிப்பிற்கு ஆளாக்கி இருக்கிறதாம். பார்வர்டு பிளாக் கட்சியினர் பலரும் இதென்ன கூத்து என்று விலகிக் கொண்ட நிலையில், சிலரை தேடிப்பிடித்துக் கூட்டிவந்து போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக வேறு இலைக்கட்சியினர் கூத்துக் காட்டியது மேலும் நகைப்பிற்கு ஆளாக்கி இருக்கிறதாம். வாழ்நாள் முழுக்க தாமரையுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் எனக் கூறிவரும் இலைக் கட்சியினர் அதன் மாநில தலைவரோடு மல்லுக்கட்டாத குறையாக அறிக்கை போர் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இலைக்கட்சியின் மாஜி மந்திரிகள் பங்கேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அழைத்து வரப்பட்டவர்களும் தாமரைக் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாம். இது இலைக் கட்சியின் குழப்ப மனநிலையை காட்டுவதுடன், சமயத்திற்கேற்ப இப்படி மாறிக் கொண்டிருப்பது கட்சி வளர்ச்சிக்கு ஆபத்தென இலைக்கட்சியின் மூத்தவர்கள் பலரது காதுபட முணுமுணுத்து புலம்பித் தவித்ததை கேட்க முடிந்தது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறைக்குள்ள என்ன சிக்கலாம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாம்பழத்திற்கு பெயர் பெற்ற ஊரில் மாவட்ட சிறை ஒன்று இருக்காம். இங்கு ஐம்பது கைதிகள் இருக்காங்களாம். இவர்களுக்கான உணவு பொருட்களின் தரமற்ற சமையல் பொருட்களை பயன்படுத்தி வருவதாக ரகசிய தகவல் ஒன்னு, சென்டரல் ஜெயில் அதிகாரிகளுக்கு கிடைச்சதாம். அதிரடியாக அங்கு சென்று பார்த்தபோது, அனைத்து மளிகை பொருட்களும் மூட்டை கட்டி தூக்கிட்டு போக வரிசையா வச்சிருந்தாங்களாம். ஜெயிலுக்கு வரும் சமையல் பொருட்கள் அனைத்தும் மளிகை கடைக்கு போகுமாம். அங்கிருந்து உளுத்துப்போன அயிட்டங்கள் சமையலுக்கு வருமாம். கைதிகளின் உறவினர்களிடம் பீடி வாங்கிட்டுவாங்கன்னு சொல்லிப்புட்டு, அதையும் மளிகை கடைக்கு அனுப்பி காசு பாத்துருவாங்களாம். ஆனால் அச்சிறையில் என்ன நடந்தாலும் வெளியே தெரியாத வகையில் வார்டர்களும் மவுனமாகவே போயிடுவாங்களாம். இதற்கு காரணம், வரும் வருவாயில் பாகுபாடு பார்க்காமல் பங்கு பிரித்து கொடுக்கப்படுமாம். இதில் எதுவும் வேண்டாமுன்னு போகிற வார்டர்களும் இருக்காங்களாம். சமீபகாலமா பங்கு பிரிப்பதில் கம்மியான அமவுண்டு கொடுத்திருக்காங்க. இதனால கோபத்தின் உச்சிக்கே போன வார்டர்களில் சிலர், விவகாரத்தை கசியவிட்டிருக்காங்க. கொக்குபோல சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஜிலென்ஸ், அதிரடியா போய் அமுத்திட்டாங்களாம். அங்கிருக்கும் பெண் அதிகாரி தான் ஜெயிலுக்கு பொறுப்பாம். அவரோ, இதுதெல்லாம் எனக்கு வெறும் ஜுஜுப்பின்னு சொன்னதோட மட்டுமல்லாமல் எனக்கு பவர் இருக்குன்னு சொல்லிட்டாங்களாம். இந்த விவகாரம் நடந்து ஒரு வாரத்தை தாண்டிட்டாம். எந்த ஆக்சனும் இல்லாததால் அவர் சொன்னதுபோல உண்மையிலேயே பவர் இருக்குமோன்னு சந்தேகத்தை எழுப்பும் வார்டர்கள், பவரை பார்க்க ஆவலோடு காத்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆபீசுக்கு வந்த வேகத்துல வீட்டுக்கு சிட்டா பறந்துடுறாங்களாம்
‘‘கிரிவலம் மாவட்டத்துல வந்தா வாசி நகர் ஆட்சியில, பெயரில் வரியை கொண்ட ஒருத்தரு வரி வசூலிப்பாளராக இருக்குறாரு. இவரு மாவட்டத்தோட தலைநகரத்துல இருந்து வாசி நகர் ஆட்சி ஆபீசுக்கு வேலைக்கு வர்றாராம். ஆபீஸ் வந்து கையெழுத்து போட்ட வேகத்துலேயே சிட்டாக பறந்து விடுகிறாராம். இவர் பகுதியில, போன மார்ச் மாதம் ஏதோ, சம்பிரதாயத்திற்காக சென்று, வரி வசூலிச்சாராம். அதுக்கு அப்புறம் எந்த பணியையும் செய்யாம ஆபீசுக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு, தினமும் வீட்டுக்கு போயிடுறாராம். மற்ற பணியாளருங்கள, மண்டலம், மாநில ஆபிசுகள்ல கேட்குற புள்ளி விவரங்களை எடுத்து கொடுத்து கான்பிரன்ஸ்ல கேள்வி கேட்டு துளையா துளைக்கிற நிலையில, வரியை பெயர்ல வெச்சிருக்குறவரு செய்யாத பணிக்கும் மற்ற ஆபீசர்ஸ் பேச்சு வாங்க வேண்டியது இருக்குதாம். இந்த பூனைக்கு யார் தான் மணி கட்டுறதோ தெரியலையேன்னு வாசி நகர் ஆட்சியில வேலை செய்றவங்க புலம்பி வர்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புரம் மாவட்ட காக்கிதுறைக்கு என்னதான் ஆச்சு..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இந்த மாவட்ட காக்கித்துறையில் கறார் அதிகாரிகளால் முக்கிய போஸ்டிங்கிற்கு வர தயக்கம் காட்டி வருகிறார்களாம்.
புரம் என்று முடியும் மாவட்டத்தில் காக்கித் துறையில் மணல், சாராயம் என்று நல்லா கல்லா கட்டும் காலம் கடந்த காலங்களில் இருந்துச்சாம். அதனால் எலக்சன் டிரான்ஸ்பரில் வந்தவர்கள் கூட திரும்பி செல்ல மாட்டார்களாம். போஸ்டிங்க கேட்டு வாங்கி வருவார்களாம். அந்த அளவுக்கு இந்த மாவட்ட ஸ்டேஷன்களுக்கு ஏகப்பட்ட கிராக்கியாம். ஆனால் இப்போது இந்த மாவட்டத்தில் போஸ்டிங் போட்டாலே அலறியடித்துக் கொண்டு சிபாரிசு மூலம் அதை கேன்சல் செய்யும் அளவிற்கு காக்கித் துறை சென்றிருக்கிறதாம். மரக்காணத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம், சம்பவத்துக்கு பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதாம். இன்சு, எஸ்பிக்கிள் பலர் வேற ரேஞ்சிக்கு தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்களாம். அதுல ஸ்பெஷல் பிரான்சு இன்ஸ்பெக்டரும் தப்பவில்லையாம். தற்போது எல்லாமே எஸ்பியின் டைரக்ட் கண்ட்ரோலில் காவல்துறை வந்திருக்கிறதாம். யாரையும் நம்பாமல் அடித்தளத்தில் இறங்கி பணியாற்றுகிறாராம். பற்றாக்குறைக்கு வாரம் இரண்டு முறை ஐஜியும் இந்த மாவட்டத்திற்கு விசிட் அடிக்கிறாராம். இதனால் துளியும் கல்லா கட்ட முடியாது என்பதால் முக்கிய இடத்திற்கு வர டிஎஸ்பி, இன்ஸ்சுகள் தயக்கம் காட்டி இருக்கிறார்களாம். புதிதாக உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி கோட்டத்திற்கு கடந்த நீண்ட நாட்களுக்கு முன் போஸ்டிங் போட்ட டிஎஸ்பியோ ஆளவிடுடாசாமி என்று தனது செல்வாக்குமூலம் டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் செய்திருக்கிறாராம். அதன் பிறகு தான் மற்றொருவர் போஸ்டிங் ஆர்டர் போட்டோம் இன்னும் பணியில் சேரவில்லையாம். இதனிடையே முக்கிய இடமான ஸ்பெஷல் பிரான்ச் இன்ஸ்பெக்டர் பணியிடம் ஒரு மாதமாக காலியாக இருக்கிறதாம். தற்போது இருக்கிற நிலமைக்கு அந்த இடத்திற்கு போனா நாலு காசு பார்க்க முடியாது பணிபளு தான் மிஞ்சும் என்று யாரும் வர தயக்கம் காட்டி வருவதால் அந்த இடம் ரொம்ப நாளாகவே காலியாக இருக்கிறதாம். கறார் அதிகாரிகளால் ஒதுங்கி ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம்!!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் திடீர் எச்சரிக்கை

தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல், மெசேஜ் நீதிபதி அதிர்ச்சி