கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை 109 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை: ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி: விஷச்சாராய உயிரிழப்புகள் பற்றிய விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 19 பேர், விழுப்புரம் 4, சேலம் 8, புதுச்சேரி ஜிப்மர் 3 என 34 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். எஸ்பி மற்றும் மதுவிலக்குப் போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் வருகை தந்தார்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் பிரசாந்த்; கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 21 பேருக்கு பிரேதப் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 3 உடல்களுக்கு மட்டுமே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். கள்ளக்குறிச்சியில் பிரேதப் பரிசோதனை முடிந்த 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை கவனிக்க சிறப்பு மருத்துவர்கள் வர உள்ளனர். பிரேதப் பரிசோதனை நடத்தவும் சேலம், திருச்சியில் இருந்து மருத்துவர்கள் கள்ளக்குறிச்சிக்கு வர உள்ளனர். விஷச்சாராய உயிரிழப்புகள் பற்றிய விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான நிவாரணம் பற்றி தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று கூறினார்.

 

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு