கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடக்காமல் இருக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் உறுப்பினர்கள் பேசியதாவது:

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நெஞ்சை உருக்கும் நிகழ்வாக கள்ளக்குறிச்சி கோர சம்பவம் நடந்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பார் என தமிழக மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். மெத்தனால் என்ற ரசாயனப் பொருட்கள் எப்படி வெளியே வருகின்றன?, இதை யார் அவர்களுக்கு அளிக்கிறார்கள் இதை கண்டறிந்து கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படிப்பட்ட துயரமான சம்பவத்தில் மலிவு அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): அரசு அதிகாரிகளே அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள். யார் காரணமாக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதனால் ஒன்றும் நடக்காது. எனவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். தொடர்ந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொ மதேக): இது அரசியல் லாபம் தேடும் நேரம் இல்லை. அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்வு காண வேண்டும். தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதித்தால் யாரும் கள்ளச்சாராயத்தை தேடிப் போகமாட்டார்கள்.

நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) : அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

நயினார் நாகேந்திரன்(பாஜ): கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பின்னணியில் இருப்பது யார் என கண்டறிய வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பாஜ உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

வைத்திலிங்கம் (அதிமுக ஓபிஎஸ் அணி): கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்ததை பாடமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்து தெரிவித்துவிட்டு உறுப்பினர் மனோஜ் பாண்டியனுடன் வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து, உறுப்பினர்கள் சதன் திருமலைக்குமார் (மதிமுக), சிந்தனைச்செல்வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோர் கருத்து தெரிவித்து பேசினர்.

Related posts

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!