போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி: இன்று முதல் பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்

சென்னை: போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆவணதாரர்களின் விரல் ரேகையை சேமிக்க கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி இன்று முதல் பயன்படுத்தப்படும் என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆவணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலி பத்திரப்பதிவை தடுக்க ஆவணதாரர்களின் உண்மைதன்மையை உறுதி செய்ய சார் பதிவாளர் அலுவலகங்களில் விரல் ரேகை சேமிக்கப்படுகிறது.

இதற்காக தற்போது மன்ட்ரே எம்எப்எஸ் 100 என்ற விரல் ரேகை கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மன்ட்ரே எம்எப்எஸ் 110 என்ற கருவியை வரும் அக்.1ம் தேதி முதல் பயன்படுத்த ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஆதார் ஆணையத்தின் நடைமுறையை பின்பற்றி சார்பதிவாளர் அலுவலகங்களில் புதிய கருவியை இன்று முதல் பயன்படுத்த பதிவுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒரு சொத்துப் பத்திரம் பதிவுக்கு வரும் போது, விற்பவரின் கைரேகை, அதன் முந்தைய பதிவின் போது பெறபட்டதுடன் ஒத்துப்போக வேண்டும். இதற்காகவே புதிய வசதி, ஸ்டார் 2.0 மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய பதிவுடன், விற்பவரின் கைரேகை ஒத்துப்போனால் மட்டுமே, புதிய பதிவு மேற்கொள்ளப்படும். இதில், வேறுபாடு இருந்தால், தற்போது தாக்கல் செய்யப்படும் பத்திரம் நிராகரிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மன்ட்ரே எம்எப்எஸ் 110 விரல் ரேகை கருவியை எல்காட் நிறுவனம் மூலம் முன்பே வழக்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் ஆவணதாரர்கனை அடையாளம் காண ஸ்டார் 2.0 மென்பொருளில் புதிய விரல் ரேகை கருவியினை பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆவணதாரர் விரல் ரேகையை முதலில் மன்ட்ரே எம்எப்எஸ் 110ல் பதிக்க வேண்டும்.

ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு ஸ்டார் 2.0 மென்பொருள் சரி, தவறு என்ற தகவலைத் தரும். தற்போதைய நடைமுறைப்படி விரல் ரேகை பொருந்தாத நிலையில் கருவிழிப்படல கருவி வழியாக அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். கருவிழி படல கருவியைப் பொறுத்துவரை தற்போது பயன்பாட்டில் உள்ள கருவியையே பயன்படுத்தலாம்.

ஆதார் ஆணையத்திடம் பெறப்பட்ட தகவல் சரி என்ற நிலையில், ஆவணதாரர் சரியான நபர் என்பதை உறுதி செய்து கொண்டு ஆவணதாரரை மீண்டும் ஒருமுறை மன்ட்ரே எம்எப்எஸ் 100ல் பதிக்குமாறு கோரவேண்டும். பதிவுத்துறை சட்டத்திற்கு ஏற்ப ஆவணதாரர்களின் விரல் ரேகையை சேமித்து வைக்க வேண்டியிருப்பதாலும், புதிய கருவிகளை பொருத்து விரல் ரேகையை சேமிக்க இயலாது என்பதால் மன்ட்ரே எம்எப்எஸ் 100 கருவியை ஆவணதாரர்களின் கைரேகையை சேமிப்பதற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.21ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்