ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மனு தள்ளுபடி: விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாஜ வேட்பாளர் நயினார்நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் 3 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் சம்மனுக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஓட்டல் ஊழியர்கள் எஸ்.சதீஷ், எஸ்.நவீன், எஸ்.பெருமாள் ஆகிய மூன்று பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காவல்துறை சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதார்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார், உரிய சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான் மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பது அல்லது சம்மனை ரத்து செய்வது வழக்கு விசாரணையை பாதிக்கும். எனவே, தற்போது எந்த தடை உத்தரவும் முடியாது. மனுதாரர்கள் சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

Related posts

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி