வன திருத்த மசோதா தொடர்பான கருத்தை இந்தி, ஆங்கிலத்தில் அனுப்பலாம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால நடை

மதுரை: வன திருத்த மசோதா தொடர்பான கருத்தை இந்தி, ஆங்கிலத்தில் அனுப்பலாம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால நடை விதித்தது. ஒன்றிய அரசின் வன திருத்த மசோதா தொடர்பான மக்களின் கருத்துகளை இந்தி, ஆங்கிலத்தில் அனுப்ப ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து; ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில்; ஒன்றிய அரசு வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மக்களவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா தொடர்பான கருத்துக்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வனப்பாதுகாப்பு சட்டம் பொருந்தகூடியது. மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணையில் தமிழ் உட்பட பிராந்திய மொழிகள் பலவும் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் ஆங்கிலத்தில் உள்ள மசோதாவை தமிழகத்தை சேர்ந்த பலர் புரிந்து கொள்ள இயலாது. இதன் மூலம் சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. எனவே மசோதாவை தமிழ் மொழியில் வெளியிட வேண்டும். மேலும் மசோதா தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதற்கான காலவரம்பு மே-18ல் முடிந்துவிட்டது.

எனவே கால வரம்பை நீட்டிப்பதுடன், தமிழில் கருத்துக்களை அனுப்புவதை ஏற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வன திருத்த மசோதா தொடர்பான கருத்தை இந்தி, ஆங்கிலத்தில் அனுப்பலாம் என்ற அறிவிப்புக்கு இடைக்கால நடை விதித்தனர். மேலும் ஒன்றிய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு