தமிழகத்திற்கு கடந்த 8 மாதங்களில் 7.60 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை: அமைச்சர் ராமசந்திரன் தகவல்

சென்னை: கடந்த 8 மாதங்களில் 7,60,545 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 19,11,87,624 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.சென்னையில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:

கொரோனாவிற்கு பிறகு 2021ம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 4,07,139 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு 2023ல் ஆகஸ்ட் வரை 7,60,545ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று, உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021ல் 11,53,36,719 ஆக இருந்து 2022ல் 21,85,84,846 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு 2023ல் ஆகஸ்ட் வரை 19,11,87,624 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வரும் வகையில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. சுற்றுலா வளர்ச்சித் திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள், உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், இயக்குநர் காகர்லா உஷா, பொதுமேலாளர் கமலா உள்பட சுற்றுலாத்துறை உதவி இயக்குநர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!