2023ம் ஆண்டு மட்டும் 9 மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 8.6 லட்சம் பேர் தமிழகம் வருகை: அமைச்சர் ராமசந்திரன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இந்தாண்டில் கடந்த 9 மாதங்களில் 8.6 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறினார். சென்னையில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தான ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர், கூட்டத்தில் அமைச்சர் ராமசந்திரன் பேசுகையில்: உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021ம் ஆண்டு 11,53,36,719 ஆக இருந்து 2022ம் ஆண்டு 21,85,84,846 ஆக உயர்ந்து, தற்போது இந்தாண்டு செப்டம்பர் மாதம் முடிய 9 மாதங்களில் 21,37,71,093 என உயர்ந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடம் ரூ.23.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளும், பிச்சாவரம் சுற்றுலாத்தலத்தினை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தினை ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் 200 நபர்கள் அமரும் வகையிலான இரண்டு அடுக்குகள் கொண்ட மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகின்றது. மேலும், மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான ஒளிரும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், கொல்லிமலையை பல்வேறு வசதிகளுடன் கூடிய முக்கிய சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் ரூ.2.22 கோடி மதிப்பீட்டிலும், உதகை படகு குழாமில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் மரவீடுகள், மரத்தின் மேல் வீடுகள், குடில் வீடுகள் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ஜவ்வாது மலையில் ரூ.2.91 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ஏலகிரி மலையில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுமட்டுமின்றி, தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தை ரூ.11.34 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுத்தும் பணிகளும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத்தலங்களில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத்தல மேம்பாட்டு பணிகளும், தூத்துக்குடி கடற்கரையை ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் நீர் விளையாட்டுக்கள் மற்றும் கடற்கரை விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கடற்கரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுத்தும் பணிகளும், புதுக்கோட்டை யில் உள்ள முத்துக்குடா கடற்கரைப் பகுதியை ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுத்தும் பணிகளும் உள்பட தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்