வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்த விவகாரம் கன்வர்லால் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 2வது முறையாக ஐடி, அமலாக்கத்துறை சோதனை: ஆடிட்டர், டாக்டர், தொழிலதிபர் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக கன்வர்லால் குழுமத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஆடிட்டர், டாக்டர், தொழிலதிபர்கள் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா காலக்கட்டத்தில் மருந்துகள் தயாரிப்பு மற்றும் மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்ட மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்து மொத்த கொள்முதல் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த அக்டோபர் 18ம் தேதி சென்னை பார்க் டவுன் பகுதியில் உள்ள மருந்துகள் மொத்த கொள்முதல் செய்யும் கன்வர்லால் குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலை, தலைமை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 நாட்கள் நடந்த சோதனையில் கன்வர்லால் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.70 கோடிக்கான ஆவணங்கள் மற்றும் 3 கிலோ தங்க நகைகள் ரூ.1.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தங்க நகைகள், ரொக்க பணம் குறித்து கணக்கு வழக்குகளை உரிய நேரத்தில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கன்வர்லால் குழுமத்திற்கு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், சொன்னபடி கன்வர்லால் குழுமம் சார்பில் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கன்வர்லால் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று 2வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குறிப்பாக சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள கன்வர்லால் குழுமத்தின் உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்கள், மாதவரத்தில் உள்ள தொழிற்சாலை, கடலூரில் உள்ள தொழிற்சாலை, வண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையின் இடையே, சட்ட விரோத பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும், ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு ஜெயஸ்ரீ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆடிட்டர் சுப்ரமணியன் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கிண்டியில் தொழிற்சாலை நடத்தி வரும் பீட்டர் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை மற்றும் கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு வரை சோதனை நடத்தினர். சென்னை அபிராமபுரம் 3வது தெருவை சேர்ந்த டாக்டர் சுந்தர் என்பவரின் வீட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். டாக்டர் சுந்தர் எம்ஜிஎம் குழுமத்தின் உறவினர் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக சோதனை நடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவல்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. இருந்தாலும், வரி ஏய்ப்புக்கான டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்