வெளி மாநிலங்களில் இருந்து ஊட்டி வரும் அரசு பஸ்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள்

*கண்டக்டர்கள் அலட்சியம்

ஊட்டி : ஊட்டியில் இருந்து வெளி மாநிலங்கள், வெளியூர்களுக்கு சென்று வரும் அரசு பஸ்கள் மூலம் நீலகிரிக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகளவு ஊடுருவுகின்றன.நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் உட்பட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை உள்ளது.

நீலகிரியில் பிளாஸ்டிக் தடை இருப்பது தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஒரு லிட்டர் பாட்டில்களை கொண்டு வந்து விடுகின்றனர். அவர்களுக்கும் அவ்வப்போது அபராதம் விதிக்கப்படுகிறது. கேரளா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய அம்மாநில அரசு பஸ்களில் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகளவிலான தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வரும் தமிழ்நாடு அரசு பஸ்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டு வெளியூர் சென்று விட்டு மீண்டும் கிளைக்குள் பஸ் வரும்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்தால் ஓட்டுநர், நடத்துனருக்கு ஒவ்வொரு பாட்டிலுக்கும் அபராதம் விதிக்கப்படும். எனவே பஸ் நீலகிரி எல்லைக்குள் வரும் முன்பு பயணிகளிடம் அறிவுறுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை நீலகிரி எல்லைக்குள் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு அது தொடர்பான நோட்டீஸ் ஊட்டி மத்திய பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

ஒரு சில நடத்துநர்கள் பிளாஸ்டிக் தடை குறித்து பஸ்சில் பயணிக்கும் பயணிகள் மத்தியில் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலான நடத்துநர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனால் பெங்களூரு, மைசூர் மற்றும் கேரள மாநில நகரங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று வரக்கூடிய தமிழ்நாடு அரசு பஸ்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தாராளமான புழங்குகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் இருந்து ஊட்டி வந்த அரசு பஸ்சில் பயணிகள் இறங்கிய பின் சுமார் 20க்கும் மேற்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில்களை நடத்துநர் எடுத்து வந்து நுழைவாயில் பகுதியில் வீசி சென்றார். இதனால் அப்பகுதி அசுத்தமாக மாறியது. அரசு பஸ்கள் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவைகள் நீலகிரிக்குள் வருவதை முற்றிலுமாக தடுப்பதை போக்குவரத்து கழகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!