நெத்தியடி

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாஜவின் நாடகங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் ‘கருப்பு பணம் ஒழிப்பு’ என்கிற பெயரில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததாகும். ஆண்டாண்டு காலமாக அரசியல் கட்சிகளுக்கு தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளிப்பது வழக்கமே. அப்போதெல்லாம் பணம் ரொக்கமாகவோ, காசோலையாகவோ அளிக்கப்பட்டு வந்தது. எதிலுமே நூதனத்தை புகுத்தும் பாஜ, தேர்தல் நிதியை பெற்றுக் கொள்வதிலும் புதிய நடைமுறைகளை கையாண்டது.

2018ம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க, தேர்தல் பத்திரங்களை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதன்மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புவோர் ரூ.1 கோடி வரை பாரத ஸ்டேட் வங்கியில் பணத்தை செலுத்தி, தேர்தல் நிதி பத்திரத்தை பெற்று, அதை அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் சிறப்பு என்னவென்றால், அந்த பத்திரத்தில் கொடுக்கும் நபரின் பெயரும் இடம் பெறாது. அவர் கொடுக்கும் அரசியல் கட்சியின் பெயரும் இடம் பெறாது.

கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்துகிறோம் என புரூடா விட்டுக் கொண்டு, ஆளும் பாஜ செயல்படுத்திய இத்திட்டம், அவர்கள் காட்டில் பணமழை கொட்ட வழிவகுத்தது. எவ்வித வெளிப்படைத்தன்மையும் அற்ற இத்திட்டத்தின் மூலம், பாஜ கோடிக்கணக்கில் நிதியை பெற்று குவித்தது. கடந்த நிதியாண்டில் மட்டுமே பாஜவுக்கு ரூ.719 கோடி நிதி கிடைக்கப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பிரச்னை தொடர்பான பொதுநல வழக்கில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டமானது, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளது.

அரசின் கணக்குகளை கேள்வி கேட்கும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது பாஜவின் நெற்றி பொட்டில் அடித்தாற்போல் உள்ளது. நன்கொடை அளிப்போரின் விபரங்களை தெரியப்படுத்த வேண்டியதில்லை என்கிற கருத்தே, ஆளும்கட்சிக்கு நன்கொடைகளை அள்ளிக் கொடுக்கும். ஏனெனில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு நிதியை வாரி வழங்கிவிட்டு, அதற்காக பல காரியங்களை சாதித்து கொள்ள அவை முற்படும். அதுதான் கடந்த 4 ஆண்டுகளாக நடந்தது என்பது வேறு.

வாக்காளர்களுக்கு தேர்தலை ஒட்டி ரூ.200 அல்லது ரூ.500 கொடுப்பது குற்றம் எனில், அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொடுப்பது மட்டும் எந்த வகையில் நியாயம்?. உச்சநீதிமன்றம் இதைத்தான் ஜனநாயகத்திற்கு விரோதமானது என இப்போது கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சட்ட திருத்த மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதும், கம்பெனி சட்ட திருத்த மசோதா ரத்து செய்யப்பட்டிருப்பதும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

பாரத ஸ்டேட் வங்கி வரும் நாட்களில் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்துவதோடு, தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகளின் விபரங்களையும் தெரிவித்திட உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடைகளை மீண்டும் வழங்கியவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்பதும் நன்மை பயக்கும். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுவதில் தேசிய கட்சிகளில் பெரும் பகுதியை பாஜவே அறுவடை செய்துள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் ஒரு கொசுறு தொகையை தங்களின் வளர்ச்சிக்கேற்ப பெற்றிருக்கக் கூடும். நாடாளுமன்ற தேர்தலில் பணத்தை தண்ணீராக செலவிட காத்திருந்த பாஜவிற்கு நீதிமன்றத்தின் உத்தரவு நிச்சயம் பாதிப்பையே தரும்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்