உணவு பாதுகாப்பில் தொடரும் அவலங்கள் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த தவளை

ஜாம்நகர்: கடையில் வாங்கிய உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த தவளை இருந்தது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் எழுப்பி உள்ளது. மும்பையை சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தது பயம் கலந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நொய்டாவை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய ஐஸ்கிரீமில் உறைந்த நிலையில் பூரான் இருந்தது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் நேற்று ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லெட் சிரப்பில் இறந்து போன எலி இருந்தது. இதை சாப்பிட்ட 3 சிறுமிகளில் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோன்ற மற்றொரு அவலம் நேற்று நடந்துள்ளது. குஜராத்தின் புஷ்கர்தாம் பகுதியில் வசிக்கும் ஜாஸ்மின் படேல் என்பவர் நேற்று தன் 4 வயது மருமகளுக்கு அருகிலுள்ள ஒரு கடையில் இருந்து உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கி கொடுத்துள்ளார். அதிலிருந்து சில சிப்ஸ்களை 4 வயது சிறுமியும், 9 வயது சிறுமியும் சாப்பிட்டுள்ளனர்.

அப்போது சிப்ஸ் துண்டுகளுக்கு நடுவே ஒரு தவளை இருப்பதை பார்த்த 9 வயது சிறுமி சிப்ஸ் பாக்கெட்டை தூக்கி எறிந்து விட்டு, ஜாஸ்மின் படேலிடம் கூறியுள்ளார். அதை நம்பாமல் சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து பார்த்த ஜாஸ்மின் உயிரிழந்த தவளை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிப்ஸ் பாக்கெட்டை தயாரித்த நிறுவனத்திடம் கேட்டபோது அந்த நிறுவனம் சரியாக பதில் தராமல் அலட்சியமாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஜாஸ்மின் படேல் புகார் அளித்தார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி சிப்ஸ் பாக்கெட்டுகளை சேகரித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுகளின் தரம், பாதுகாப்பில் தொடரும் அலட்சியங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்