Food spot

ஃப்ரைடு ஐஸ்கிரீம்

நம்மில் பலருக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் ஐஸ்கிரீம் என்றாலே குழந்தை ஆகிவிடும் மனம். அந்தளவிற்கு ஐஸ்கிரீம் விரும்பிகள் நாம். அந்த ஐஸ்கிரீமில் புதிதாக வெரைட்டியாக சாப்பிட வேண்டுமென்று நினைத்தால் ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கிற கிரீம் ஸ்டோரி நல்ல சாய்ஸ். இதுவரை யாருமே சாப்பிட்டுப் பார்க்காத புட்டு ஐஸ்கிரீம், சான்ட்வெஜ் ஐஸ்கிரீம் என பல வெரைட்டி கொடுத்து வருகிறார்கள். அதிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம் என்றால் அது ஃப்ரைடு ஐஸ்கிரீம்தான். ஆம், சிக்கன் ஃப்ரை, மட்டன் ஃப்ரை சாப்பிட்ட நமக்கு ஐஸ்கிரீம் ஃப்ரை புதிதுதான். வெளியே பார்ப்பதற்கு கிரிஸ்பியாகவும், காரமாகவும் உள்ளே ஐஸ்கிரீம் வைத்து புதுவகையான சுவையில் தருகிறார்கள்.

ஜிகர்தண்டா தூது

மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா அனைவருமே குடித்திருப்போம். அதிலே கொஞ்சம் கூடுதலாக நட்ஸ், கிரீம் எல்லாம் சேர்த்து தயாரிக்கப்படும் பானம்தான் ஜிகர்தண்டா தூது. இந்த பானம் ஒரு பஞ்சாப் ஸ்பெஷல். சாதாரணமாக கிடைக்கும் ஜிகர்தாண்டாவைக் குடிப்பதற்கே சிலர் மதுரை வரை சென்று வருவார்கள். அதிலும் சுவையான இந்த ஜிகர்தண்டா தூதுவை குடிக்க வேண்டுமென்றால் பஞ்சாப் செல்ல வேண்டுமா? என யோசிக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. நுங்கம்பாக்கத்தில் இருக்கிற தாபா இ.எஸ்.டி.டி சென்றாலே போதும். இந்த உணவகத்தில் பஞ்சாப் ஸ்பெஷல் உணவுகள் அனைத்துமே கிடைக்கும். வேறு மாநில உணவுகளில் ஏதாவது புதிதாக சாப்பிட வேண்டுமென்றாலும் இந்த உணவகம் நல்ல சாய்ஸ்.

முடவாட்டுக்கால் சூப்

அசைவ சூப்களை விட சைவ சூப்கள்தான் நமது உடம்பிற்கு ஆரோக்கியமாக இருக்கும். அப்படிப்பட்ட சைவ சூப்கள் சென்னையில் பல இடங்களில் கிடைக்கிறது. அதில் மிளகு சூப், பூண்டு சூப், மஸ்ரூம் சூப் என பல வகையான சூப்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட சைவ சூப்களில் முதன்மையானதுதான் முடவாட்டுக்கால் சூப். உடம்பிற்கு வலு சேர்ப்பது மட்டுமில்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் இந்த சூப் சென்னையில் ஒருசில இடங்களில்தான் கிடைக்கிறது. முகப்பேர் ஜே.ஜே.நகர் வெரைட்டி சென்டருக்கு அருகே இயங்கும் ஒரு சூப் கடையில் இந்த முடவாட்டுக்கால் சூப் கிடைக்கிறது. ஆரோக்கியம் காக்க வேண்டுமென நினைப்பவர்கள் இந்த சூப்பைக் குடித்து பயனடையலாம்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு