Food spot

டம்ளர் இட்லி

இட்லியில் பல வெரைட்டிகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் சிறுதானிய இட்லிக்கள் சென்னையிலேயே பல உணவகங்களில் கிடைத்து வருகிறது. இது அனைத்தையும் விட இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இட்லிதான் டம்ளர் இட்லி. டம்ளருக்குள் மாவை ஊற்றி வேக வைத்துக் கொடுக்கிறார்கள். சாதாரண இட்லியைப் போல இல்லாமல் சுவையிலும், வடிவத்திலும் வித்தியாசமாக இருப்பதால் இந்த இட்லி இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இட்லியோடு வடகறியும் சேர்த்துக் கொடுப்பதால் செங்குன்றத்தில் இருக்கிற மண்ணாங்கட்டி ஓட்டல் உணவுப் பிரியர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறது. சுமார் 50 வருடங்களுக்கும் மேல் இருக்கிற இந்த உணவகத்தில் புரோட்டா பாயாவும் கிடைப்பது கூடுதல் சிறப்பு.

கறி தோசை

கறி இட்லி, கறி தோசை என்றாலே நமக்கு மதுரைதான் ஞாபகம் வரும். அந்தளவிற்கு சைவ உணவுகளைக் கூட அசைவத்தோடு சேர்த்து சாப்பிடுவதைத்தான் நாம் விரும்புகிறோம். அப்படி மதுரையில் கிடைக்கிற கறிதோசையைப் போலவே சென்னையில் சாப்பிட வேண்டுமென்றால் ஆவடியில் இருக்கிற கூரக்கடை குப்புசாமி மெஸ் நல்ல சாய்ஸ். மற்ற இடத்தில் கிடைக்கும் கறிதோசையைப் போல இல்லாமல், அதாவது தோசைக்கு மேலே கறியை வைத்து வேகவைத்து கறிதோசை எனக் கொடுக்காமல், தோசைமாவுடன் கறியையும் நன்றாக சேர்த்து கறிதோசை தருவதால் மதுரையை விட கொஞ்சம் தூக்கலான சுவையிலேயே இங்கு கறிதோசை கிடைக்கிறது.

பால் பரோட்டா

கேரளா உணவுகளில் புட்டு, கடலக்கறி எல்லாமே நமக்கு தெரிந்த உணவுகள்தான். ஆனால், பால் பரோட்டா பெரும்பாலும் எங்கேயுமே கேள்விப்பட்டிருக்கமாட்டோம். ஆமாம், தாம்பரம் கேரளா கார்னர் என்கிற உணவகத்தில் இருக்கிறது இந்த பால் பரோட்டா. எல்லா இடங்களிலும் கிடைக்கிற சாதாரணப் பரோட்டாவாக இல்லாமல் ஒரு மண்பானையில் பரோட்டா, சிக்கனோடு சேர்த்து பாலும் ஊற்றி வித்தியாசமான சுவையில் செய்து தருகிறார்கள். கேரளாவில் உள்ள அனைத்து வகையான உணவுகளும் இந்த உணவகத்தில் இருந்தாலும் இந்த பால் பரோட்டாவை சாப்பிடுவதற்கே தனிக் கூட்டம் வருகிறது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை