உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு நகைக்கடை உரிமையாளர் மகள் தற்கொலை: மனைவி, மகன் சீரியஸ்: திருவனந்தபுரம் அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு நகைக்கடை உரிமையாளர், மகள் தற்கொலை செய்து கொண்டனர். மனைவி, மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகே பெரிங்கம்மலை பகுதியை சேர்ந்தவர் சிவராஜன் (56). மனைவி பிந்து (51). இவர்களுக்கு அபிராமி (22), அர்ஜூன் (20) என்ற மகள், மகன் உள்ளனர். சிவராஜன் புளிங்குடி என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வந்தார்.

நேற்றிரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். சிவராஜனுடன் அவரது தாயும் வசித்து வருகிறார். இன்று காலையில் நீண்ட நேரமாகியும் சிவராஜன் உள்பட 4 பேரும் எழும்பவில்லை. தனி அறையில் படுத்திருந்த தாய் கதவை தட்டினார். அர்ஜுன் மட்டும் அரைகுறை மயக்கத்துடன் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது, ‘4 பேரும் இரவில் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டோம்’ என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அர்ஜுனே, விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து விவரத்தை கூறி உள்ளார். உடனே போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜனும், அபிராமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். அர்ஜுன், பிந்து ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் இறங்கி குளிக்க தடை விதிப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை

ஆகஸ்ட் 03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை