சாப்பாட்டிலும் இருக்கு சில சம்பிரதாயங்கள்!


உணவு விசயத்தில் நம் முன்னோர் காலம் காலமாக சில நம்பிக்கைகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள். எந்த உணவுகளில் என்ன விதமான நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள் என கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சி இந்த இதழில்….முதன் முதலாக வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு இனிப்பு வழங்க வேண்டும். முருங்கைக் கீரை, இறைச்சி உணவு ஆகியவற்றை அளிக்கக்கூடாது என்ற நம்பிக்கைகளும் தமிழ்ச் சமூகத்தில் காணப்படுகிறது. பொதுவாக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இனிப்பு வழங்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. விருந்தினர் வீட்டுக்கு வருவது மகிழ்ச்சியாகக் கருதப்பட்டு இனிப்பு வழங்கும் பண்பு தோன்றியிருக்கலாம். முருங்கைக் கீரை சாவுச் சடங்கோடு தொடர்புடையது என்பதனால் முதலில் வரும் விருந்தினருக்கு அளிக்கக்கூடாது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இறைச்சி உணவை விருந்துகளில் பரிமாறுவதும் குறைந்து காணப்படுகிறது.வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணக் கூடாது என்பது ஒரு நம்பிக்கை.

தெற்கு வடக்காகப் படுக்கக் கூடாது என்றுகூட ஒரு நம்பிக்கை இருக்கிறது. இது அறிவியல் பூர்வமான காரணமாகக் கூறப்படுகிறது. பூமிக்குள் நிகழும் காந்த அலைகள் வடக்கிருந்து தெற்காகச் செல்வதனால் அவ்வாறு படுக்கும்போது காந்த அலைகளினால் உடல் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக வடக்கு நோக்கி உண்ணக் கூடாது என்ற நம்பிக்கைத் தோன்றியிருக்கலாம். `பூசை வடக்கோமா, போசனம் தெக்கோமா’ என்ற பழமொழியும் கூறப்படுகிறது. வடக்கு நோக்கிக் கடவுளுக்குப் பூசை செய்வதனால் சாப்பிடுவது தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும்கூறப்படுகிறது.மேற்கண்ட நம்பிக்கைகள் குறித்து விளக்கமான ஆய்வுகள் தேவை. எனவே இவை மேலாய்வுக்கு விடப்படுகின்றன. மேற்கண்ட செய்திகளில் இருந்து நாம் பின்வரும் முடிவுகளை அறியலாம். மக்களிடம் காணப்படும் விருந்தோம்பல் பண்பு பன்முகத்தன்மை வாய்ந்ததாகக் காணப்படுகின்றன. விருந்தோடு தொடர்புடைய அறுசுவை உணவு என்பது நாவின் சுவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை. ஆறு தாதுக்களையும் வளப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இவை அதிகமானாலோ,குறைந்தாலோ நோய்கள் ஏற்படும். தெய்வங்களுக்குப் படைக்கப்படும் உணவு வகைகளின் மூலம் நாட்டுப்புற மக்களின் பண்பாடு வெளிப்படுகிறது. குறிப்பாகக் குலதெய்வப் படையலிலும், ஊர்த்தெய்வப் படையலிலும் காணப்படும் உணவுமுறைகள் மக்களிடம் காணப்படும் கூட்டுணர்வை வெளிப்படுத்துகின்றன.புழங்குபொருள்களின் மூலம் மக்களுடைய பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் வெளிப்படுகின்றன. மண்பாண்டங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. மண்பாண்டங்களும், மரப்பொருள்களும் கிராமங்களில் மக்களுக்காக அப்பகுதியில் சில தொழிலாளர்களால் செய்து வழங்கப்பட்டன. அதன்மூலம் மக்களுக்கும் அத் தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவு காணப்பட்டது. இன்றைய நுகர்வு கலாச்சாரம் கிராமங்களையும் விட்டுவைக்கவில்லை. இயற்கையில் கிடைக்கும் பொருள்களைத் தங்களின் தேவைக்கேற்பகருவிகளாக்கிக் கொள்ளும் தன்னம்பிக்கையும் இதன் மூலம் மக்களிடம் குறைந்து வருகிறது. உணவு குறித்த நம்பிக்கைகள் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்து காணப்படுகின்றன. இதுகுறித்த விரிவான தனித்த ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

– இரத்தின புகழேந்தி

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை