உணவும் உலக நாடுகளும்!

உணவு என்பது ஒரு கலாசாரத்தின், வரலாற்றின் அழியாத அம்சமாக இருந்து வருகிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் எப்போதும் புதுமையாக மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், நம் ஊர் உணவுகள் பலவும் அயல்நாடுகளில் வேறு வித பெயரில், வேறு நிறத்தில் இடம் பெயர்ந்து அந்தந்த நாட்டிற்கேற்ப வலம் வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள இடம் பெயர்வு, சமையல் பொருட்களின் இயக்கம், சமையல் நுட்பங்கள் ஆகியவை பெரும்பாலான உணவுகளின் வரலாறாக இருக்கிறது. அப்படி நம் ஊர் உணவுகள் சில எந்தெந்த விதத்தில் வலம் வருகிறது என்பதைப்பார்ப்போம்..

மஞ்சள் பால்: நம்மூரில் சளி, இருமல் இருந்தால், பொதுவான கை வைத்தியமாக காய்ச்சிய பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து தருவார்கள். இது அமெரிக்கன் காபி ஷாப்களில் பொடித்த பிஸ்தா, முந்திரி, மஞ்சள்தூள் சேர்த்து டர்மரிக்லாட்டோ என்ற பெயரில் விற்பனை
செய்யப்படுகிறது.

கேசரி: இது நம் தமிழகத்தின் முதன்மை பெற்ற இனிப்பாகும். அவசரத்துக்கு செய்யக்கூடிய இனிப்பும் கேசரிதான். இது செளதி அரேபியா, எகிப்து நாடுகளில் பஸ்பூசா என்ற பெயரில் ரவையுடன் க்ரீம், தேங்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பேக்கிங் ட்ரேயில் ஊற்றி ஓவனில் வைத்து எடுத்து, பின் அதன்மேல் முந்திரியைத் தூள்செய்து போட்டு அதன்மேல் சீனிப்பாகு ஊற்றி கட் செய்து விற்கிறார்கள்.

கடலைமிட்டாய்: நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்பான கடலை மிட்டாயை ஆல்மண்ட் பிரிட்டில், பீடேமுலாக் என்ற பெயரில் எல்லாவிதமான நட்ஸ்களையும் சேர்த்து சாக்லேட் பாகு சேர்த்து சதுர வடிவில் தயார் செய்து சாக்லேட் கடலை மிட்டாயாக விற்பனை செய்கிறார்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில்.

இடியாப்பம்: தமிழகம் மற்றும் கேரளாவின் பிரபலமான டிபன் அயிட்டமாகும். அரிசி மாவில் தயாரித்து ஆவியில் வேக வைக்கும் இந்த உணவு பண்டத்தை, புட்டுமாயம் என்னும் பெயரில் மலேசிய நாட்டிலும், ஸ்டீரிங் ஹாப்பர்ஸ் என்ற பெயரில் இலங்கையிலும்தயாரிக்கப்படுகிறது.

ஆப்பம் தேங்காய்ப்பால்: இதுவும் நம்மூரின் பாரம்பரிய காலை உணவாகும். இதனை, சேராபி என்னும் பெயரில் இந்தோனேசியாவிலும், அப்பம் பாலிக் என்ற பெயரில் மலேசிய நாட்டிலும் தயார் செய்யப்படுகிறது.

சமோசா: இது 13-14 ஆம் நூற்றாண்டுகளில் பெர்ஷியா நாட்டில் இருந்து இந்தியா வந்த உணவாகும். ஆனால், இது நாளடைவில் இந்திய உணவாகவே மாறிப்போனது. இதனை, சமூக்காஸ் எனும் பெயரில் போர்ச்சுக்கல் நாட்டிலும் என்பனந்தா என்ற பெயரில் அர்ஜென்டினா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது.

சிக்கன் கறி: இது பஞ்சாப் மாநிலத்தின் சுவை மிகுந்த உணவாகும். இது இங்கிலாந்தில் ஃபால்கறி என்கிற பெயரில் பிரபலமாக உணவு விடுதிகளில் வழங்கப்படுகிறது.

கொழுக்கட்டை – மோதகம்: இதுவும் நமது பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியாகும். மோமோடம்ப்ளிங் இது சீனா நாட்டில் மிகப் பிரபலமான ஓர் உணவாகும். இது மேமூஸ் என்னும் பெயரில் அந்நாட்டில் உள்ளது. இவை அனைத்தும் நம் இந்தியா நாட்டிலிருந்து அதே வடிவமாய், வேறு வேறு பொருட்களைச் சேர்த்து செய்யப்பட்ட உணவாக அயல்நாடுகளில் உலாவி வந்து கொண்டிருப்பது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துபவைகளாக இருக்கும். அதுபோன்று, நம் நாட்டில் தென்னக ஸ்டைல் உணவிற்கு எப்போதும் தனி முத்திரை உண்டு. சாம்பாரில் தொடங்கி பாயசத்தைச் சாப்பிட்டு முடிக்கும் வரை உணவுப் பிரியர்கள் மிகவும் உற்சாகமாய் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். அனைத்து நாட்டு மக்களும் நம் நாட்டு உணவுகளை ரசித்து ருசித்து உண்ணும் அளவிற்கு நம்நாட்டு உணவிற்கு தனிச் சுவை உண்டு. சில அயல்நாட்டினர் நமது நாட்டு உணவுகளை ருசிப்பதற்காகவே, சுற்றுலா பயணியாக நம் நாட்டுக்கு வந்து போவதும் அவ்வப்போது நடைபெறுகிறது. அந்தளவிற்கு பார்போற்றும் பாரம்பரிய உணவு நம் நாட்டு உணவாகும். அதுபோன்று, காரம், புளிப்பு, இனிப்பு, கசப்பு, உப்பு, துவர்ப்பு போன்ற அறுசுவையும் நிறைந்திருக்கும். அதிலும் குறிப்பாக வாழை இலையில் பாிமாறப்படும் நம் தென்னிந்திய உணவுகள் என்றும் அமிர்தம் தான். அது போன்று உலகத்திலேயே உணவு வகையில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். இந்தியாவில் மட்டும் இரண்டரை லட்சம் உணவு வகைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் நாட்டுக்கு அடுத்தபடியாக சீனாவில் 35 ஆயிரம் உணவு வகைகள் இருக்கிறதாம். ஆனால், நாகரிகம் என்ற பெயரில் நாம் இன்று நமது உடலுக்கு ஒவ்வாத உணவுகளையும், மேல்நாட்டு கலாசாரத்தில் மூழ்கி, அதைப் பின்பற்றியும் நலனை கெடுத்துக் கொள்கிறோம். எனவே, இனிவரும் தலைமுறை இதைப் புரிந்துகொண்டு, மேல்நாட்டு உணவுகளின் மோகத்தை விட்டுவிட்டு, நம்மூரின் பாரம்பரிய உணவு பழக்கத்துக்கு மாற வேண்டும். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும்.

குழிப்பணியாரம்: இது நம் தமிழ்நாட்டில் காரைக்குடி செட்டிநாடு பகுதிகளின் பிரபல சிற்றூண்டியாகும். இது எப்லஸ் கைபர் என்ற பெயரில் டச்சு நாட்டிலும் டக்கயோக்கி என்ற பெயரில் ஜப்பானிலும் தயாரிக்கப்படுகிறது.

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு