கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 100 இடங்களில் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 இடங்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி முத்தரசி ரவியின் கலைக்கோயில் நாட்டியப் பள்ளியின் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சங்கத் தமிழ்’ இசை நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்துகொண்டு நாடகத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: கலைஞர் இன்று நம்மோடு உருவமாக இல்லை என்றாலும் தன் எழுத்துகளால், உரைகளால், திரைவசனங்களால், பாடல்களால், நாடகங்களால், அனைத்து வகையிலும் முத்தமிழுக்குப் பெருமை சேர்த்து இன்றும் நம்மோடு வாழ்கிறார். சங்கீத நாடக சபைக்கு தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் என முத்தமிழையும் சேர்த்து அருமையான தமிழ்ப்பெயர் சூட்ட கலைஞரை தவிர வேறு எவராலும் முடியாது.

தமிழக அரசு தமிழ்நாடு இயல், இசை நாடகமன்றத்தின் வாயிலாக, நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவியும், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும், கலைக்குழுக்களுக்கும், இசைக்கருவிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்க ரூ.10,000 நிதியுதவியும் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் நலிவடைந்த 23 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு ரூ.9.11 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது, 500 கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகளும், ரூ.70 லட்சம் நிதியுதவியும், 733 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ.31.19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரூ.1 கோடி மதிப்பில் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், கலைஞரின் வாழ்க்கை வரலாறு குறித்த நாட்டிய நாடகங்கள் ரூ.15 லட்சம் செலவிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும் கலைஞரின் சங்கத்தமிழ் நூல் தமிழ் பல்கலைக் கழகத்தால் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன், மற்றும் சிதம்பரம் அகடாமி ஆப் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் நிறுவனர் சித்ரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Related posts

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு