நாட்டுப்புற கலை, கலைஞர்களுக்கு உத்வேகம் விருது கிடைத்தது எனக்கல்ல கிராமிய கலைக்கான அங்கீகாரம்: ‘பத்ம’ பத்திரப்பன் பெருமிதம்

மேட்டுப்பாளையம்: குடியரசு தினத்தையொட்டி 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த வள்ளி கும்மியாட்ட ஆசிரியர் பத்திரப்பனுக்கு (87) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பன் கடந்த 1936ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி மாரண்ண கவுடர்-ரங்கம்மாள் தம்பதிக்கு மூன்றாவதாக பிறந்த மகன். இவருக்கு 2 அக்காள்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி. குறு விவசாயியாக இருந்து விவசாயம் செய்து வருவதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். அந்த காலகட்ட 10வது வரை மட்டுமே படித்த இவர் கடந்த 1958ம் ஆண்டு முதன்முதலில் அரிச்சந்திர கும்மி என்ற கிராமப்புற கலையை கற்று ஆடியுள்ளார். தொடர்ந்து அந்த கலையை கற்று தேர்ந்து தற்போது வள்ளி கும்மியாட்டத்தின் ஆசானாக உள்ளார். இவரது மனைவி மாதம்மாள் (88). தம்பதிக்கு நக்கீரன் என்ற மகனும், முத்தம்மாள் என்ற மகளும் உள்ளனர். நக்கீரன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். மாதம்மாளும் இறந்துவிட்டார். தற்போது முத்தம்மாளுடன் பத்திரப்பன் வசித்து வருகிறார்.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட எவ்வித தொலைதொடர்பு வசதிகளும் இல்லாத அந்த காலகட்டத்தில் முருகன்-வள்ளி திருமண கதை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, பாரதியார் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவற்றை தனது வள்ளிக்கும்மி ஆட்டத்தின் மூலமாக மக்களுக்கு ஊர் ஊராக எடுத்துச்சென்றுள்ளார். தற்போது வரை இவர் 200க்கும் மேற்பட்ட கிராமப்புற கலைஞர்களை உருவாக்கியுள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கிராமிய கலை அழிந்து விடக்கூடாது என்ற ஒரு தாகம் காரணமாகவும் தொடர்ந்து தனது கலைப்பணியை செய்து வந்துள்ளார். அவரது சேவைக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்து உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: பத்மஸ்ரீ விருது கிராமிய கலைக்காக. அந்த கலையை வளர்த்ததற்காக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த விருது எனக்காக வழங்கப்பட்டது அல்ல. கிராமிய கலைக்கான அங்கீகாரம். எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததன் மூலம் இந்த நாட்டுப்புற கலைகளுக்கு, கலைஞர்களுக்கு உத்வேகம் கிடைத்துள்ளது. சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் திறமை இருந்தால் இந்த மாதிரியான பத்ம விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கிராமிய கலையை வருமானம் இல்லை என்று யாரும் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அழிந்து வந்த இந்த கலை கடந்த மூன்று ஆண்டுகளாக வள்ளிக் கும்மியாட்டம், பவள கும்மியாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு பெயர்களில் கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களால் பொதுமக்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘கலைமாமணி’வழங்கி கவுரவித்த தமிழக அரசு

வள்ளி கும்மியாட்ட கிராமியக்கலையை மக்களுக்கு கற்றுக்கொடுத்ததன் மூலமாக கடந்த 2019ம் ஆண்டு தமிழக அரசால் பத்திரப்பனுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. கிராமிய கலைகளை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்த்ததன் மூலம் பல்வேறு சமூக நல அமைப்புகள், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மூலம் பல்வேறு விருதுகளை பத்திரப்பன் பெற்றுள்ளார்.

Related posts

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார்!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!