பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியர் அதிரடி உத்தரவு

திருச்சி: திருச்சியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவையொட்டி வரும் 20ம் தேதி (சனிக்கிழமை) பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, விமான நிலையத்தில் இருந்து கோயிலுக்கு வரும் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் ஸ்ரீரங்கம் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையத்தை கடந்த 2ம் தேதி பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைத்தார். இந்நிலையில் மீண்டும் 2 வாரங்களில் 2வது முறையாக பிரதமர் மோடி திருச்சி வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் வருகையையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் (எஸ்பிஜி) ஓரிரு நாட்களில் ஸ்ரீரங்கம் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் உள்ள உள்வீதி, திருவடி வீதிகளில் உள்ள வீடுகளில் போலீசார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர்.

குடியிருப்போரின் பெயர், வெளியூர்களில் வந்தவர்கள் யாரும் தங்கியுள்ளார்களாக, முகவரி, அடையாள அட்டை என அனைத்து தகவலையும் சேகரித்து வருகின்றனர். இதேபோல் அனைத்து கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோயிலுக்குள் இயங்கி வரும் பொம்மை மற்றும் இரும்பு கடை உள்ளிட்ட கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி திருச்சியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் 20ம் தேதி வரை ட்ரோன்களை பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Related posts

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம்

குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்

கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது