மலர் மாஸ்க்குகள்

பண்டிகை காலங்கள் என்றாலே உணவுப் பொருட்கள், பூஜை பொருட்கள் மட்டுமின்றி பூஜைக்காக வாங்கும் மலர்களும் கூட மீதமாகும். அவற்றை சிலர் குளிர்சாதன பெட்டியில் வைத்து அடுத்தடுத்த வாரங்களில் சாமிக்கு வைப்பதுண்டு. ஆனால் ஒரு சிலர் அப்படியே தூக்கி குப்பையில் போட்டு விடுவதும் உண்டு. ஆனால் இந்த பூக்களில் ஏராளமான சரும பயன்கள் இருப்பதை மறந்து விடுகிறோம். இதோ சருமத்திற்கு பயன் தரும் சில மலர் மாஸ்க்குகள்

செம்பருத்தி: செம்பருத்தி பூவை நன்கு மசித்து அதனுடன் 1/2 டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடர், 1/2 டீஸ்பூன் தேன் சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூச இயற்கையான பளபளப்பும் கிடைப்பதுடன் சூரியனால் ஏற்பட்ட கருமையும் நீங்கும்.

தாமரை: தாமரை மலரின் இதழ்களை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வேக வைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு இதழ்களுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் ஆக மாற்றிக் கொள்ளவும். இதனுடன் சிறிது கடலை மாவு அல்லது ஓட்ஸ் சேர்த்து கலவையாக மாற்றி முகத்தில் நன்கு மசாஜ் செய்து கழுவலாம். தாமரை மலர்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் சருமத்திற்கு தேவையான கொலாஜன் போதுமான அளவு கிடைத்து ரத்த நாளங்களை தூண்டி முகத்திற்கு தேவையான புத்துணர்ச்சியை கொடுக்கும்.

மல்லிகை: சிறிதளவு மல்லிகைப் பூக்களை எடுத்துக் கொண்டு நன்கு மசித்து அத்துடன் தயிர் மற்றும் கற்றாழை ஜெல் கலந்து முகத்திற்கான பேக் தயாரித்து இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகச்சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கப் பெறும்.

செவ்வந்தி: சில செவ்வந்திப் பூக்களை நன்கு மசித்து அதனுடன் பால் அல்லது பால் பவுடரை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் முகத்தில் பூச முகத்தின் நீண்ட நாட்களாக சேர்ந்த அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.

ரோஜா: பத்து ரோஜா இதழ்கள் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சந்தனம், ஒரு டீஸ்பூன் பால், அத்துடன் 8 முதல் 9 குங்குமப்பூ துகள்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பளிச்சென்று தோற்றம் கொடுக்கும். மேலும் இறந்த செல்கள் நீங்கி முகத்திற்கு தேவையான ஹைட்ரேஷன் கிடைக்கும்.
– கவின்

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்