பூ, பழங்கள் விலை கடும் உயர்வு; களைகட்டியது ஆயுத பூஜை: சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர்

சென்னை: ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. பூஜை பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூ, பழங்கள் விலை கடுமையாக உயர்ந்தது. 4 நாட்கள் தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 12 லட்சம் பேர் படையெடுத்துள்ளனர். சுற்றுலா தலங்களிலும் மக்கள் குவிந்துள்ளனர். நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது.

இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற பொருட்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக சென்னையில் கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை நேற்றே விறுவிறுப்பாக தொடங்கியது. ஆயுத பூஜைக்கு முந்தைய தினமான இன்று விற்பனை மேலும் களை கட்டியது. கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கத்தில் பொருட்களை வாங்க காலையில் இருந்தே மக்கள் வரத் தொடங்கினர். இதனால், விற்பனை களை கட்டியது. மாலையில் விற்பனை மேலும் விறுவிறுப்படைந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்கள் விற்பனை கிடு, கிடுவென உயர்ந்தது.

அதாவது கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஆப்பிள்1 கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையும், மாதுளை, ஆரஞ்ச் ரூ.150 முதல் ரூ.200 வரையும், சாத்துக்குடி ரகத்துக்கு ஏற்ப கிலோ ரூ.60 முதல் ரூ.150 வரையும், கொய்யா, திராட்சை கிலோ ரூ.100க்கும் விற்பனையானது. மஞ்சள் வாழை ஒரு தார் ரூ.300 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் பழங்கள் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகமாக விற்கப்பட்டது. தேங்காய் ரூ.25லிருந்து ரூ.30க்கும் விற்கப்பட்டது.

இதே போல, பொரி ஒரு படி ரூ.20, உடைத்த கடலை கிலோ ரூ.100, அவல் சிறிய ரகம் கிலோ ரூ.120, வாழைக்கன்று இரண்டு ரூ.40, மாவிலை தோரணம் இரண்டு ரூ.20, வெள்ளை பூசணி ரூ.30 முதல் ரூ.50 வரை, தென்னை குருத்தோலை தோரணம் இரண்டு ரூ.25, ரூ.30 ஆகவும் விற்கப்பட்டது. கரும்பு கட்டு ரூ.500 க்கு விற்பனையானது. காய்கறி விலைகளில் மாற்றம் இல்லாமல் பழைய விலைக்கே விற்கப்பட்டது. பூ விலை கிடு,கிடு உயர்வு: மொத்தவிலையில் சாமந்தி பூ(1 கிலோ) ரூ.160 முதல் ரூ.180 வரையும், பன்னீர் ரோஸ் ரூ.140 முதல் ரூ.160 வரையும், சாக்லேட் ரோஸ் ரூ.200 முதல் ரூ.220 வரையும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதே போல் மல்லி, ஐஸ் மல்லி மற்றும் முல்லை கிலோ ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் அரளி பூ ரூ.500க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சில்லரை விற்பனையில் பூ விலை மொத்த விலையை விட ரூ.25 வரை அதிகமாக விற்பனையானது. இதே போல் அனைத்து பூஜை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. விலை அதிகரித்த போதிலும், விலையை பற்றி கவலைப்படாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கினர்.

பஸ், ரயில்களில் கூட்டம்: நாளை ஆயுத பூஜை, நாளை மறுநாள் விஜய தசமி விடுமுறை நாளாகும். அதே நேரத்தில் நேற்று, இன்று, நாளை, நாளை மறுநாள் என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை தினம் வந்தது. இந்த நிலையில், சென்னையில் வசிப்போர் மற்றும் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுமுறைைய கழிக்க சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதலே புறப்பட தொடங்கினர். இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக ரயில்களில் முன்பதிவில்லா பெட்டியில் நிற்க கூட முடியாத அளவுக்கு நெரிசலில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது. ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் எப்படியாவது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். அதே போல் இன்றும் முன்பதிவில்லாத பெட்டிகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால், அனைத்து ரயில்களிலும் ஹவுஸ் புல் ஆனது. அதே நேரத்தில் பஸ்களில் செல்பவர்கள் காலை முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிய தொடங்கினர். இதே போல் பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கூடுதலாக 651 பஸ்கள் இயக்கம்: சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு ஒரு நாளைக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் 651 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் அரசு பஸ்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இதே போல ஆம்னி பஸ்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இன்றும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆயுதபூஜை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக வருகிற செவ்வாய் கிழமை இதே அளவில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதே போல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

இதனால், அந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.சனி, ஞாயிறு விடுமுறை, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை தினம் வந்ததால் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரயில், பஸ்கள், கார்களில் என சுமார் 12 லட்சம் பேர் தங்களது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொந்த இடங்களுக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இன்று முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு