அடிக்கடி வந்து போறீங்க… வெள்ள நிவாரணம், எய்ம்சை பத்தி எதுவுமே பேசமாட்றீங்க பிரதமரே…!

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். தொடர்ந்து 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமென பாஜ அரசு அறிவித்தது. அப்போதைய அதிமுக ஆட்சியாளர்களுடன் மல்லுக்கட்டி, ஒரு வழியாக இடம் தேர்வு செய்யப்பட்டு, மதுரை தோப்பூரில் 2019, ஜன. 27ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அடிக்கல் நாட்டி சென்றார் பிரதமர் மோடி. 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வருமென்றும் தெரிவித்தார். ஆனால், அவர் அடிக்கல் நாட்டிய செங்கல் மட்டுமே தற்போது தோப்பூரில் காட்சிப்பொருளாக உள்ளது.

தற்போது 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வந்து விட்டது. இதற்கு முன்னோட்டமாக திருப்பூர், மதுரை, தூத்துக்குடி மாவட்டத்துக்கும் பிரதமர் மோடி வந்து சென்றார். ஆனாலும், எங்கும் மதுரை எய்ம்ஸ் பற்றி மறந்து கூட ஒரு வார்த்தை பேசவில்லை. சில தினங்களுக்கு முன் மதுரைக்கு பிரதமர் வந்திருந்தபோது கூட எய்ம்ஸ் நிலவரம் பற்றி எதுவும் சொல்லவில்லை. மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களும் எய்ம்ஸ் பற்றி மூச்சு விடுவதில்லை. கேள்விகள் கேட்கப்பட்டாலும் எய்ம்ஸ் வரைபடத்தில் கூட இல்லாத தகவலை கூறி பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்குகின்றனர். உச்சக்கட்டமாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரையில் எய்ம்ஸ் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக கூறி மிரள வைத்தார்.

தமிழ்நாட்டில் பெருமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கும் சென்ற பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு குறித்தோ, நிவாரணம் குறித்தோ அங்கு மூச்சு கூட விடவில்லை. தென்மாவட்டங்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசாமல், பிரதமர் மோடி விசிட் அடித்துச் சென்றதற்கு நெட்டிசன்கள், ‘தென்மாவட்டங்களுக்கு அடிக்கடி வந்து போறீங்க… எய்ம்சை பத்தி எதுவுமே பேச மாட்டேங்குறீங்க…வெள்ள நிவாரணம் கொடுக்க மாட்டுறீங்க… தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க மாட்டுறீங்க… ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு மட்டும் உங்களுக்கு வேண்டுமா?’’ என சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜ தலைவர்களை கலாய்த்து வருகின்றனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு