விஜயவாடாவில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் தவிப்பு: மீட்பு பணிகளுக்காக அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

அமராவதி: விஜயவாடாவில் நிவாரண, மீட்பு பணிகளுக்காக இன்று காலை முதல் வார்டு வாரியாக அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்கள் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. விஜயவாடா நகரின் பெரும் பகுதியில் 3வது நாளாக வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை காரணமாக வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கிய 43,417 பேர் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைகப்பட்டுள்ளது. 197 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜயவாடாவில் 3-வது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள், மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ட்ரோன் மற்றும் படகுகள் மூலமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது.

6 ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர், பால், பழங்கள், பிஸ்கட், மருந்து உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. என்.டி.ஆர்.மாவட்டமான விஜயவாடா முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் சிக்கியுள்ளனர். நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் உட்புறப்பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்து கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிவாரண, மீட்பு பணிகளுக்காக இன்று காலை முதல் வார்டு வாரியாக அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 8 ஐஏஎஸ் அதிகாரிகள் 24 மணி நேரமும் நிவாரண, மீட்பு பணிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலி

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி