வெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகளுக்கு உணவு ரயில்வே துறை கொடுத்த ரூ.15 ஆயிரத்தை முதல்வரின் நிதிக்கு வழங்கிய கிராம மக்கள்

தூத்துக்குடி: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கியதற்காக ரயில்வே துறையினர் வழங்கிய ரூ.15,000 பரிசுத்தொகையை தாதன்குளம் கிராம மக்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு நேற்று வழங்கினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி பெய்த கனமழையால் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் தண்டவாளத்தின் அடிப்பகுதி அரித்து செல்லப்பட்டது. இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. உணவின்றி தவித்த பயணிகள் பலர் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து தாதன்குளம் வந்தனர். அவர்களுக்கு அந்த கிராம மக்கள் உணவு வழங்கி உபசரித்தனர்.

மேலும், சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தனர். அந்த கிராம மக்களின் இந்த செயலை பாராட்டி ரயில்வே நிர்வாகம் ரூ.15,000 பரிசுத்தொகையை தாதன்குளம் மக்களிடம் வழங்கியது. அரசு தரும் நிதிக்காகவோ, பேருக்காகவோ இந்த உதவி செய்யவில்லை என்று கூறிய கிராம மக்கள் அதனை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர். மேலும் ரயில்வே துறை அதிகாரிகளிடம், தாதன்குளத்தில் பாலக்காடு ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில் நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ரயில்வே அதிகாரி ஆவன செய்வதாக உறுதியளித்தனர்.

இந்தநிலையில் ரயில்வே துறை பாராட்டி வழங்கிய ரூ.15,000யை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க கிராம மக்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த தூத்துக்குடி எம்பி கனிமொழியிடம் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குமாறு ரூ.15,000 ஒப்படைத்தனர். மேலும், ரயில்வே அதிகாரியிடம் தெரிவித்த 2 கோரிக்கையையும் எம்பி கனிமொழியிடம் வலியுறுத்தினர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? ஐகோர்ட் கேள்வி

சாமியார் போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு.. ஜென் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு

தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா